சென்னை:
முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வெளிநாடு தப்பி செல்வதை தடுக்க லுக் அவுட் நோட்டீஸை இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் தமிழக காவல் துறை வழங்கியுள்ளது.அதிமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்தவர் கே.டி. ராஜேந்திர பாலாஜி. ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்ததாக இவர் மீது புகார் எழுந்தது. அது போல் உதவியாளர்கள் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் உள்ளிட்டோர் மீதும் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
முன்ஜாமீன் மனு தள்ளுபடி
இந்த நிலையில் இந்த வழக்கில் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து எப்படியும் கைது செய்யப்பட்டுவிடுவோம் என கருதிய ராஜேந்திர பாலாஜி கடந்த வெள்ளிக்கிழமை முதல் தலைமறைவாகியுள்ளார்.
தேடி வரும் 8 தனிப்படைகள்
அவரை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ராஜேந்திர பாலாஜி பெங்களூருவில் இருப்பதாக வந்த தகவலை வைத்து தனிப்படை போலீஸார் பெங்களூரு விரைந்தனர். தென்காசி குற்றாலம், கேரளாவில் இருப்பதாகவும் வந்த தகவலை அடுத்து அங்கும் தனிப்படை போலீஸார் சென்றுள்ளனர்.
உச்சநீதிமன்றத்தில் மனு
அவர் விரைந்து கைது செய்யப்படுவார் என தெரிகிறது. இந்த நிலையில் தனக்கு முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்னும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. இதையடுத்து தனது இருப்பிடம் கேட்டு தனது உறவினர்களை போலீஸார் துன்புறுத்துவதால் முன்ஜாமீன் மனுவை விரைந்து விசாரிக்குமாறு புதியதொரு மனுவை நேற்று தாக்கல் செய்துள்ளார்.
வெளிநாட்டுக்கு தப்புவது
இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக ராஜேந்திர பாலாஜியை தேடி வரும் நிலையில் அவர் வெளிநாட்டுக்கு தப்புவதை தடுக்க லுக் அவுட் நோட்டீஸ் தர முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸை தமிழக காவல் துறை வழங்கியுள்ளது. இதனால் விமான நிலையங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ராஜேந்திர பாலாஜி இனி வெளிநாட்டுக்கு ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது.
+ There are no comments
Add yours