சென்னை:

நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் எந்த கட்சியினராக இருந்தாலும் அவர்களை பொது மக்கள் தட்டிக் கேட்க வேண்டும் என்று, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். வங்கக் கடலில் கடந்த 9ம் தேதி உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, சென்னைக்கு அருகே நேற்று மாலை கரையைக் கடந்தது. இதனால் 5 நாட்களாக சென்னையில் மழை பெய்தது. வழக்கத்தை விட 491 சதவீதம் அதிகம் மழை பதிவாகியுள்ளது. இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கமல்ஹாசன் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

சென்னை விசிட்

சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட தரமணி தந்தை பெரியார் நகர், கருணாநிதி தெருவில் சாக்கடை நீருடன் தேங்கி இருந்த மழைநீரால் மக்கள் அவதிப்பட்டனர். இந்த பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தண்ணீரில் நடந்து சென்று பார்வையிட்டார். பின்னர் மக்களுக்கு அரிசி, பிரட், பிஸ்கட் ஆகியவற்றை வழங்கினார்.

பருவமழை

இதன் பின்னர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மழையால் பாதிக்கப்படும் சம்பவம் வருடா வருடம் நடப்பதை தெரிந்து கொண்டும், அதை சரி செய்யாமல் இருக்கிறோம். பருவமழை என்பது ஆண்டுதோறும் நடைபெறும் நிகழ்வு. பருவமழையைப் பேரிடராக மாற்றுவது நமது கவனக் குறைவே. அதற்காக அரசு மீது தவறு இல்லை என்று நான் கூறவில்லை. அரசு மீதும் தவறு உள்ளது. அரசு மீது தவறு இல்லாமல் இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டு இருக்காது.

 

 

ஆக்கிரமிப்பு குற்றம்

இதில் தனி மனிதர்களுக்கும் பொறுப்பு இருக்கிறது. அடுத்த வருடம் பார்த்து கொள்ளலாம் என்று விட்டு சென்றுவிடாமல் தொடர்ந்து செயலாக இருக்கும் வேண்டும். ஏன் செய்யவில்லை என்று கேள்வி கேட்க வேண்டும். இந்த பாதிப்பில் ஒவ்வொருவரும் பங்கெடுத்துக் கொண்டு, நீர் நிலைகளை ஆக்கிரமித்தலைக் குற்றமாகக் கருதி நாமும் அதைச் செய்யாமலிருக்க வேண்டும்.

 

 

தட்டிக் கேட்க வேண்டும்

பட்டா கிடைக்காததால் போதும் என்ற நிலை இல்லாமல் நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்யாமல் இருக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை செய்பவர்களை தடுக்க எந்த கட்சியினராக இருந்தாலும் துணிந்து குரல் தர வேண்டும். எனது கட்சியினர் அனைவரும் நிவாரணம் செய்கின்றனர். எனது பிறந்த நாளை கொண்டாடாமல் உதவி செய்து வருகின்றனர்.

 

ம.நீ.ம உறுப்பினர்கள் உதவி

மழை முடிந்த பின்னர் அரசும், தனி மனிதர்களும், இயக்கங்களும் உதவி செய்ய வேண்டும். இந்த பகுதி மெட்ரோ குடிநீர் வாரிய உதவி பொறியாளரிடம் சாக்கடை பாதிப்பு குறித்து பேசினேன். மக்களுக்கு உதவி செய்யும், மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது நன்றி. இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *