சேலம்:

அதிமுகவுக்கு துணை போகும் அதிகாரிகள் விரைவில் தங்கள் போக்கை திருத்திக்கொள்ள வேண்டும் என நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு எச்சரித்துள்ளார். சேலம் மாவட்ட வளர்ச்சிப் பணிகளுக்கான பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அவர் அங்கு செய்தியாளர்களை சந்தித்த போது இதனைக் கூறினார். சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை இன்னும் பல அதிகாரிகள் அதிமுக ஆதரவு மனநிலையிலேயே செயல்படுவதாக கே.என்.நேருவிடம் உள்ளூர் திமுகவினர் புகார் கூறிய நிலையில் நேரு இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறார்.

ஆலோசனைக் கூட்டம்

சேலம் மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் அந்த மாவட்டத்துக்கான பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள கே.என்.நேரு கலந்துகொண்டு எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து பேசினார். சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி மற்றும் மாநகராட்சி வார்டுகளில் திமுக வெற்றிபெறப் போவது உறுதி எனக் கூறிய அவர், சேலம் மாவட்டத்தில் உள்ள சில அதிகாரிகள் இன்னும் அதிமுகவுக்கு துணைபோகும் வகையில் செயல்படுவதாக தனக்கு தகவல் வருவதாகவும் அவர்கள் விரைவில் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஒரு தொகுதி

நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சேலம் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டுமே திமுக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனால் வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சியை கோட்டை விட்டுவிடக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு அங்கு அமைச்சர் கே.என்.நேருவை களத்தில் இறக்கியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து கே.என்.நேரு அங்கு அரசியல் செய்யத் தொடங்கியிருப்பதால் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

மாவட்டச் செயலாளர்

அதிமுகவில் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற உயர்ந்த பதவியில் இருந்தாலும் கூட சேலம் மாவட்டச் செயலாளர் பதவியையும் எடப்பாடி பழனிசாமி தான் தன் வசம் வைத்துள்ளார். இதனால் எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சேலம் மாநகராட்சியை அதிமுக கைப்பற்ற வேண்டும் என இலக்கு நிர்ணயித்து செயல்படத் தொடங்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *