சென்னை: கோடம்பாக்கத்தில் போதையில் இருசக்கர வாகனங்களை அடித்து உடைத்து, ரகளையில் ஈடுபட்ட 4 பேர் கும்பலை போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம், சுபேதார் கார்டன், வரதராஜா பேட்டை ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை, போதையில் வந்த ரவுடி கும்பல் ஒன்று, அங்கு நிறுத்தியிருந்த 10-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை அடுத்தடுத்து கீழே தள்ளி விட்டு, கட்டையால் அடித்து உடைத்தது.

இதுகுறித்து சுபேதார் கார்டன் பகுதியை சேர்ந்த தாமஸ் என்பவர், அவர்களை தட்டி கேட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்த போதை ஆசாமிகள், சிறிய வகை கத்தியால் அவரது இடது தொடையில் கிழித்துள்ளனர்.

மேலும், அப்பகுதியில் உள்ள மளிகை கடைகளில் புகுந்து பொருட்களை சேதப்படுத்தி, மாமூல் கேட்டு வியாபாரிகளை மிரட்டி சென்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தை சேர்ந்த கடை உரிமையாளர்கள் இமான், முருகலிங்கம், ஆசை பாண்டியன் உள்ளிட்டோர் கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து விசாரணையில் இறங்கிய போலீஸார் சம்பவ இடம் மற்றும் அதை சுற்றியுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி அதை அடிப்படையாக வைத்து துப்பு துலக்கினர்.

மேலும், நடத்தப்பட்ட விசாரணையில் போதையில் ரகளையில் ஈடுபட்டது கோடம்பாக்கத்தைச் சேர்ந்த குகன் (19) மற்றும் அவரது கூட்டாளிகள் 15, 16, 17 வயதுடைய இளஞ்சிறார்கள் என தெரியவந்தது. இதையடுத்து, இந்த 4 பேரையும் கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *