திருப்பத்தூர்: வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்ய வேண்டி கோடிக்கணக்கான பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வந்த புகாரின் அடிப்படையில், திருப்பத்தூரில் அதிமுக முன்னாள் எம்எல்ஏவின் உறவினர் வீட்டில் வருமான வரித் துறையினர் இன்று பல மணி நேரம் சோதனை நடத்தினர்.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. இதையொட்டி, அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கவும், கண்காணிக்கவும் ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியில் பறக்கும் படை குழு மற்றும் நிலையான கண்காணிப்பு குழு நியமிக்கப்பட்டு அவர்கள் தொடர்ச்சியாக பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.

இது மட்டுமின்றி மக்களவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதி மீறில்கள் எங்கேயாவது இருந்தால் அது தொடர்பான புகார்களை பொதுமக்கள், அரசியல் கட்சியினர் தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறைகளும் தொடங்கப்பட்டன. இது தவிர வருமான வரித்துறை அலுவலகத்திலும் மக்களவை தேர்தலை முன்னிட்டு கட்டுப்பாட்டு அறை ஒன்று தொடங்கப்பட்டது. இந்த அலுவலகத்துக்கு தேர்தல் தொடர்பான புகார் வந்தால் சம்மந்தப்பட்ட இடங்களில் வருமான வரித் துறையினர் நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், திருப்பத்தூர் சட்டப்பேரவை தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ கே.ஜி. ரமேஷின் உறவினர் வீட்டில் வருமான வரித் துறையினர் இன்று அதிரடியாக சோதனை நடத்தினர். திருப்பத்தூர் திருநாத முதலியார் தெருவில் வசித்து வருபவர் நவீன்குமார்(40). ரியல் எஸ்டேட் தொழில், நிதி நிறுவனம் நடத்தி வரும் நவீன்குமார் திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்தையொட்டி நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் ‘போட்டோ ஸ்டூடியோ’ ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய இவரது வீட்டில் கோடிக்கணக்கில் ரொக்கப் பணம் பதுக்கி வைத்துள்ளதாகவும், இரவு நேரங்களில் பணம் விநியோகம் நடைபெறுவதாக வருமான வரித்துறை அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் விஷ்ணு சங்கர் தலைமையிலான வருமான வரித்துறையினர் நேற்று நள்ளிரவு நவீன்குமார் வீட்டிற்கு வந்தனர். பிறகு, வீட்டுக்குள் சென்ற வருமான வரித்துறையினர் விடிய, விடிய சோதனை நடத்தினர்.

நள்ளிரவில் தொடங்கிய சோதனை, இன்று காலை 11 மணியை கடந்தும் நீடித்தது. இதில், முக்கிய ஆவணங்கள் மற்றும் ரூ.40 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. திருவண்ணாமலை மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கலியபெருமாளுக்கு வாக்களிக்க வாக்காளர்களுக்கு நவீன்குமார் வீட்டில் இருந்து தான் பணப்பட்டுவாடா நடப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையிலேயே வருமான வரித்துறையினர் இந்த சோதனையில் ஈடுபட்டதாகவும், திருப்பத்தூரில் மேலும் சிலரது வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *