சென்னை: சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில் குறித்து சென்னை பெருநகர காவல் துறை, சைபர் கிரைம் பிரிவில் வழக்குப் பதிவு செய்து, மின்னஞ்சல் அனுப்பிய நபரை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். எனவே, மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் அச்சப்பட வேண்டாம் என சென்னை பெருநகர காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் கூறியிருப்பதாவது: இன்று (பிப்.8) காலை 10 மணியளவில், சக்தி வாய்ந்த வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், பள்ளிகளில் இருந்து குழந்தைகளை வெளியே அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு, சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 13 தனியார் பள்ளிகளுக்கு அடையாளம் தெரியாத நபர் மின்னஞ்சல் (e-mail) மூலம் வெடிகுண்டு மிரட்டல் அனுப்பியுள்ளார்.

இத்தகவலை பெற்றதும் சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், உத்தரவின்பேரில், சம்பந்தப்பட்ட காவல் துறையினர், வெடிகுண்டு செயலிழப்பு குழு மற்றும் மோப்ப நாய்களுடன், மேற்கூறிய பள்ளிகளில் நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகள்படி (SOP) சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேற்படி தேடுதலின் போது வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதும், மின்னஞ்சல் மூலம் வந்த மிரட்டல் புரளி என தெரியவந்தது.

மேற்கண்ட வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில் குறித்து சென்னை பெருநகர காவல்துறை, சைபர் கிரைம் பிரிவில் வழக்குப் பதிவு செய்து, மின்னஞ்சல் அனுப்பிய நபரை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். எனவே, மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் அச்சப்பட வேண்டாம் என சென்னை பெருநகர காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்படுகிறது.

இனி வரும் காலங்களில், இதுபோன்ற மிரட்டல் மின்னஞ்சல்கள், அழைப்புகள், கடிதங்கள் ஏதேனும் வந்தால், சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பள்ளிகளின் நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அச்சம் கொள்ளாமல், பள்ளியின் இயல்பான செயல்பாட்டை சீர்குலைக்க வேண்டாம் என்றும், உடனடியாக காவல்துறை உதவி எண் 100 அல்லது 112 ஆகியவற்றிற்கு உடனடியாக தகவல் தெரிவித்தால், காவல்துறை மூலம் தேவையான உதவிகள் விரைந்து செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இது போன்ற புரளியான மின்னஞ்சல் மிரட்டல்கள், அழைப்புகள் அனுப்புபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *