தேனி: நியோ மேக்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனம் மூலம் ரூ.10 கோடி வரை வசூலித்து முறைகேடு செய்ததாக தேனியில் முக்கிய நிர்வாகியை மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட ‘நியோ-மேக்ஸ்’ ரியல் எஸ்டேட் நிறுவனம், பல்வேறு ஊர்களில் கிளைகளை உருவாக்கி, கூடுதல் வட்டி, டெபாசிட் தொகைக்கு இரட்டிப்பு பணம் வழங்குவதாக ஏராளமானோரிடம் முதலீடுகளை ஈர்த்து மோசடியில் ஈடுபட்டது.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த மதுரை பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸார் நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகளாக மதுரை கமலக் கண்ணன், பாலசுப்பிரமணியன், திருச்சி வீரசக்தி மற்றும் நிறுவனங்களின் இயக்குநர்கள், முகவர்கள் என சுமார் 90-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். பொருளாதாரக் குற்றத்தடுப்புப் பிரிவு சிறப்பு டிஎஸ்பி மணிஷா தலைமையிலான தனிப்படையினர் வழக்கில் தொடர்புடையவர்களை தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். இதுவரையிலும் அந்நிறுவன முக்கிய நிர்வாகிகள் உட்பட 17-க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து கைது செய்யப்படுகின்றனர்.

இந்நிலையில், சில நாளுக்கு முன்பு, நியோ மேக்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவன இயக்குநர்களான சிவகங்கை மாவட்டம், குமாரபட்டியைச் சேர்ந்த அசோக் மேத்தா, மதிவாணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களை தொடர்ந்து தேனி மாவட்டம், அம்மாபட்டியைச் சேர்ந்த அப்பார் ராஜா (58) என்பவரை டிஎஸ்பி மணிஷா தலைமையிலான தனிப் படையினர் கைது செய்துள்ளனர்.

இவர் மில்லியோனா டெவலப்பர்ஸ் என்ற நிறுவனத்தின் இயக்குநராக இருந்து, சுமார் 30-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் ரூ.10 கோடி வரை வசூலித்து, முறைகேடு செய்திருப்பதாக பொருளாதார குற்றப் பிரிவு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *