மதுரை: மதுரையில் கிராமிய பாடகியை கொன்று, கபட நாடகமாடிய மைக் செட் ஆப்ரேட்டர் கைது செய்யப்பட்டார்.

மதுரை மதிச்சியம் பகுதியிலுள்ள சப்பானிகோயில் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ் (37). மேடை கச்சேரிகளுக்கான மைக் செட் ஆப்ரேட்டராக இருந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் கவிதா (34). கிராமிய பாடகியான இவர் ‘கவிக்குயில் கவிதா’ என்ற பெயரில் கிராமிய இசைக்கச்சேரி அமைப்பாளராக இருந்தார். இருவருக்கும் ஏற்கெனவே திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.

கருத்து வேறுபாடு காரணமாக கவிதா கணவரையும், நாகராஜ் மனைவியையும் பிரிந்தனர். இருவரின் குழந்தைகள் அவரது பெற்றோர் வீட்டில் வளரும் நிலையில், கடந்த 7 ஆண்டாக கணவன், மனைவியாக சேர்ந்து வாழ்ந்தனர். கிராமிய நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த இவர்கள், மதிச்சியம் பகுதியை விட்டு, மேலூர் அருகிலுள்ள பதினெட்டாக்குடி பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்தனர்.

4 நாளுக்கு முன்பு கவிதா மதிச்சியத்திலுள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்தார். இந்நிலையில் டிச.30-ம் தேதி நாகராஜூம் மாமியார் வீட்டுக்கு மதிச்சியத்திற்கு வந்தார். இருவரும் வீட்டில் இருந்தபோது, மாலை 4.30 மணிக்கு மேல் திடீரென கவிதா ரத்த வாந்தி எடுப்பதாக நாகராஜ் வெளியில் வந்து அழுதுள்ளார். இதைத்தொடந்து அக்கம், பக்கத்தினர் மூலமாக ஆட்டோ மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து நாகராஜ் தனது மாமியார் மற்றும் குடும்பத்தினருடன் மதிச்சியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இருப்பினும், கவிதாவின் கழுத்து பகுதியில் காயத் தடயம் இருந்ததால் காவல் ஆய்வாளர் சேதுமணி மாதவன் விசாரணையை தீவிரப்படுத்தினார். அவரை அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநரிடம் விசாரித்தபோது, அவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிந்தது. இதன்படி, பிரேத பரிசோதனையிலும் கவிதா, நாகராஜால் கழுத்து நெரித்து கொல்லப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நாகராஜை போலீஸார் கைது செய்தனர்.

போலீஸ் தரப்பில் கூறுகையில், “கவிதாவும், நாகராஜூம் தங்களது குழந்தைகளைவிட்டு கணவன், மனைவியாக சேர்ந்து வாழ்ந்த நிலையில், அவ்வப்போது, இவர்களுக்குள் கருத்து வேறுபாடும் இருந்துள்ளது. கொஞ்சம் கடன் இருந்துள்ளது. இதற்காக கவிதா பெயரில் வங்கியில் ரூ.1.25 லட்சம் லோன் வாங்கியுள்ளனர். கடனை அடைத்ததுபோக, ரூ.65 ஆயிரம் வங்கி கணக்கில் எஞ்சி இருந்துள்ளது. 30ம் தேதி இருவரும் வங்கிக்குச் சென்று அப்பணத்தை எடுத்துள்ளனர். இதில் தனியாக வீடு எடுத்து வசிக்கலாம் என பேசியுள்ளனர்.

இதற்கு கவிதா உடன்படாமல், ‘இனிமேல் உன்னுடன் வாழ விருப்பமில்லை, உனது பழைய மனைவி, குழந்தைகளுடன் சென்றுவிடு’ என, கூறியதாக தெரிகிறது. இது தொடர்பாக அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த நாகராஜ் கவிதாவை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, காவல் நிலையத்திற்கு சென்று புகாரும் கொடுத்தார். மேலும், கவிதா ரத்த வாந்தி எடுத்ததாகவும் கபட நாடமாடியதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரை கைது செய்தோம்” என்றனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *