சென்னை: வீட்டில் பணி செய்த பெண்ணை கொடுமைப்படுத்திய விவகாரத்தில் தலைமறைவாக இருந்த திமுக எம்எல்ஏவின் மகன், மருமகளை வேலூர் அருகே தனிப்படை போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன். இவர், திருவான்மியூர் சவுத் அவென்யூவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புஒன்றில் மனைவி மெர்லினாவுடன் வசித்து வருகிறார்.இவரது வீட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த 18 வயது இளம்பெண், 6 மாதங்களுக்கு முன்பு வேலைக்கு சேர்க்கப்பட்டார்.

இந்த பெண்ணை மெர்லினாவும், அவரது கணவரும்தாக்கி கொடுமைப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுகுறித்து நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரி தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். முதல்கட்டமாக எம்எல்ஏவின் மகன், மருமகள் மீது தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 4 பிரிவுகளின்கீழ் கடந்த 18-ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து ஆண்ட்ரோ மதிவாணன், மெர்லினா ஆகியோர் எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியானது. ஆனால், அவர்கள் இருவரும் தலைமறைவாகினர். அவர்களைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இதனிடையே, எம்எல்ஏ மகன், மருமகள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘சம்பந்தப்பட்ட இளம்பெண் மீது நாங்கள் தாக்குதல் நடத்தவில்லை. இந்த வழக்கில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரணடையும் நாளிலேயே தங்களது ஜாமீன் மனுவை பரிசீலிக்கும்படி அமர்வு நீதிமன்றத்துக்கு உத்தரவிட வேண்டும்’’ என கோரியிருந்தனர்.

தலைமறைவாக இருந்த ஆண்ட்ரோ மதிவாணன், மெர்லினா இருவரையும் தனிப்படை போலீஸார் தொடர்ந்து தேடி வந்தனர். அவர்கள் ஆந்திராவுக்கு காரில் செல்வது தெரியவந்தது. இதையடுத்து, வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் இருவரையும் போலீஸார் மடக்கி நேற்று கைது செய்தனர். இருவரையும் போலீஸார் சென்னைக்கு அழைத்து வந்து விசாரிக்க உள்ளனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நேற்று காலை மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *