நாடாளுமன்ற மக்களவைக்கும், மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கும், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று மத்தியில் ஆளும் பா.ஜ.க விரும்புகிறது. ஆகவே, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறை குறித்து கடந்த சில ஆண்டுகளாக பா.ஜ.க தீவிரமாகப் பேசிவருகிறது.

மோடி, அமித்ஷா

தேர்தல் நடைமுறையில் இந்த மாற்றத்தைக் கொண்டுவந்தால், நாட்டின் வளர்ச்சிப் பணிகள் முடுக்கிவிடப்படும் என்ற வாதத்தை முன்வைக்கிறார்கள், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறையை ஆதரிப்பவர்கள். ஏனெனில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடுகின்றன. அதனால் புதிய திட்டங்கள் உள்ளிட்ட புதிய அறிவிப்புகள் எதையும் அரசால் அறிவிக்க முடியாது.

தற்போது, ஒவ்வோர் ஆண்டு சில மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கு தேர்தல் நடைபெறும் சூழல் நிலவுகிறது. அதனால், நாட்டின் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படுகின்றன என்று ஒரு தரப்பினர் வாதிடுகிறார்கள். ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறையை நடைமுறைப்படுத்தினால், இந்தச் சிக்கல் இருக்காது. மேலும், தேர்தல் செலவுகள் வெகுவாகக் குறையும். அரசு அலுவலர்கள் அடிக்கடி தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த வேண்டிய தேவை இருக்காது என்ற வாதங்களும் முன்வைக்கப்படுகின்றன.

இந்தியத் தேர்தல் ஆணையம்

அதே நேரத்தில், தற்போதைய அரசியல் சூழலில் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையைக் கொண்டுவருவது கடினம் என்ற கருத்தும் நிலவுகிறது. ஏனெனில், மத்தியில் பா.ஜ.க ஆளும் நிலையில், பல மாநிலங்களில் எதிர்க்கட்சிகளின் ஆட்சி நடைபெறுகிறது. அவற்றில் பல ஆளுங்கட்சிகள் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையைக் கடுமையாக எதிர்க்கின்றன. இதனால், இந்த புதிய முறையைக் கொண்டுவருவதில் சிக்கல் இருக்கிறது.

உதாரணமாக, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறையைக் கைவிட வேண்டும் என்று மத்திய அரசை தி.மு.க வலியுறுத்தியிருக்கிறது. இது குறித்து சட்ட ஆணையத்திடம் தனது கருத்தை தி.மு.க பதிவுசெய்திருக்கிறது. மேலும், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் குறித்து ஆராய்ந்துவரும் உயர்நிலைக் குழுவுக்கு மூன்று கடிதங்களை தி.மு.க எழுதியிருக்கிறது. கடந்த ஆண்டின் அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்களிலும், இந்த ஆண்டின் ஜனவரி மாதத்திலும் அந்தக் கடிதங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன.

ஸ்டாலின்

அந்தக் கடிதத்தில், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறை முற்றிலும் நடைமுறைக்கு சாத்தியமற்றது. அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சத்துக்கு எதிரானது. எனவே, இந்தத் திட்டம் தொடர்பான ஆய்வை உயர்நிலைக்குழு நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், சட்டத்தின் துணையுடன் உரிய நடவடிக்கையை தி.மு.க எடுக்கும்’ என்று அக்கட்சி கூறியிருக்கிறது.

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் கொண்டுவரப்பட்டால், தி.மு.க மட்டுமல்ல, எந்த அரசியல் கட்சியும் நாட்டில் செயல்பட முடியாது’ என்று முதல்வர் ஸ்டாலின் ஏற்கெனவே பேசியிருக்கிறார். ஆனால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க-வோ, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை ஆதரிக்கிறது.

எடப்பாடி பழனிசாமி

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறை குறித்து அனைத்து அரசியல் கட்சிகளிடமும் சட்ட ஆணையம் கடந்த ஆண்டு கருத்து கேட்டது. அது தொடர்பாக, அ.தி.மு.க பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு, எடப்பாடி பழனிசாமிக்கு சட்ட ஆணையம் கடிதம் அனுப்பியது. அதற்கு பதிலளித்து சட்ட ஆணையத்துக்கு கடிதம் எழுதிய எடப்பாடி பழனிசாமி, ‘ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு அ.தி.மு.க ஆதரவு அளிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது. அந்த நேரத்தில், பா.ஜ.க-வுடன் அ.தி.மு.க கூட்டணியில் இருந்தது. அந்தச் சூழலில், ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவு தெரிவித்தார்.

மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல் முறை அமலுக்கு வந்துவிட்டால், 2024-ல் நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து தமிழ்நாடு சட்டமன்றத்துக்கும் தேர்தல் வரும். தி.மு.க அரசு மீது மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டிருக்கும் சூழலில், சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று எடப்பாடி பழனிசாமி கணக்குப் போட்டார். ஆனால், பா.ஜ.க கூட்டணியிலிருந்து வெளியேறிய பிறகு, ஒரே நாடு ஒரே தேர்தல் முறை குறித்து அ.தி.மு.க அதிகம் பேசுவதில்லை.

சீமான்

காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஆகியவையும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கடுமையாக எதிர்க்கின்றன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை கடுமையாக எதிர்க்கிறது.

இந்த நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் முறையின் சாதகங்களையும் பாதகங்களையும் பட்டியலிட்டு விரிவான விவரங்களுடன் உயர்நிலைக் குழுவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ்.

ஒரே நாடு ஒரே தேர்தல் முறை பற்றி பாட்டாளி மக்கள் கட்சி தனது கருத்தை தெரிவித்து உயர்நிலை குழுவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் முறைக்கு விகிதாச்சார பிரதிநிதித்துவம் மிகவும் வலுசேர்ப்பதாக இருக்கும். விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையை நடைமுறைப்படுத்த உயர்நிலைக் குழு பரிந்துரைக்க வேண்டும் எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அன்புமணி ராமதாஸ்

ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை விரைவாக அமல்படுத்த வேண்டும் என்கிறார் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி. ஒரே நாடு ஒரே தேர்தல் முறை அவசியமற்றது என்பது நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு. இந்த முறையால், எந்த பயனும் ஏற்படாது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *