ஜெய்ஷ் அல் அட்ல் அமைப்பின் இரண்டு தீவிரவாத தளங்கள் மீது தாக்குதல் நடத்துவதாக கூறி பாகிஸ்தான் மீது டிரோன், ஏவுகணைகள் மூலம் இரான் தாக்குதல் நடத்தி இருக்கிறது. இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான், இது  வான்வெளியில் நடத்தப்பட்ட இரானின் அத்துமீறல் எனக் கூறியுள்ளது. மேலும் இந்த தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததாகவும் மேலும் 3 பேர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் தெரிவித்தது.

பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் அல்-அட்லின்  இரண்டு முக்கியமான தலைமையகங்கள் அழிக்கப்பட்டதாக அல் அரேபியா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான்

பாகிஸ்தானின் இறையாண்மையின் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான், இரானிய வெளியுறவு அமைச்சகத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. உயிரிழப்புகள் நடந்த இடத்தை பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் குறிப்பிடாத நிலையில், அந்த தளங்கள் பலுசிஸ்தானில் இருப்பதாகவும், அது தீவிரவாத அமைப்பின் மிகப்பெரிய தலைமையகத்தை  குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரானின் தாக்குதலை “தனது வான்வெளியில் நடத்தப்பட்ட அத்துமீறல்” என்று விவரித்த பாகிஸ்தான், “இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் இது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்” எனவும் தெரிவித்தது

“தீவிரவாதம் என்பது எல்லா நாடுகளும் சந்திக்கும் பொதுவான அச்சுறுதல். அதற்கு சரியான கூட்டு நடவடிக்கை வேண்டும் என்று பாகிஸ்தான் எப்போதும் கூறி வருகிறது.  இத்தகைய ஒருதலைப்பட்சமான செயல்கள் அண்டை நாடுகள் மீதான இருதரப்பு நம்பிக்கையையும் நம்பகத்தன்மையையும் கடுமையாக குறைக்கிறது” என்று பாகிஸ்தான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்களில் பகிரப்படும் சில வீடியோக்களில், பாகிஸ்தான் மீது இரான் நடத்திய தாக்குதலில் 8 மற்றும் 12 வயதுடைய இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டதாகக் கூறி சேதமடைந்த வீடுகள் காட்டப்படுகின்றன.

இரான்

ஜெய்ஷ் அல்-அட்ல் என்பது 2012 ஆண்டு இரானில் உருவாக்கப்பட்ட பயங்கரவாத அமைப்பு ஆகும். இது இரானின் தென்கிழக்கு மாகாணமான சிஸ்தான்-பலூசிஸ்தானில் செயல்படும் சன்னி பயங்கரவாதக் குழு. பல ஆண்டுகளாக, ஜெய்ஷ் அல்-அட்ல் இரானிய பாதுகாப்புப் படைகள் மீது ஏராளமான தாக்குதல்களை நடத்தியது. 

டிசம்பரில், சிஸ்தான் – பலூசிஸ்தானில் உள்ள காவல்நிலையத்தின் மீதான தாக்குதலுக்கு ஜெய்ஷ் அல்-அட்ல் பொறுப்பேற்றது. அதில்  11 காவல் துறையினர்  கொல்லப்பட்டனர்.சிஸ்தான்-பலுசிஸ்தான் என்பது  ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் எல்லையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *