மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் ஒவ்வொரு ஆண்டும் அமர்ந்து பார்க்கும் கேலரியில் இந்த ஆண்டு உள்ளூர் அரசியல்வாதிகள், அவர்கள் குடும்பத்தினர் ஆக்கிரமித்து கொண்டதால் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் 2 மணி நேரமாக வெயிலில் தவித்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை நாளில் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகள், மாணவர்கள், ஆய்வாளர்கள், வெளிநாடு வாழ் தமிழர்கள் பொங்கல் பண்டிகை நாளில் மதுரைக்கு திட்டமிட்டு மதுரை வந்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிடுவார்கள். சுற்றுலாத்துறை சார்பில் அவர்களை தனி பஸ்சில், அழைத்து வந்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட வைப்பார்கள்.

வெளிநாட்டினர் பார்வையிடுவதற்காகவே, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வாடிவாசல் அருகே ‘உலக சுற்றுலாப்பயணிகள் கேலரி’ என்ற கேலரி அமைக்கப்பட்டிருக்கும். இந்த கேலரியில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் ஷிப்ட் முறையில் வந்து ஜல்லிக்கட்டு போட்டியை பார்ப்பார்கள். ஆனால், இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் வந்த விஐபி அரசியல்வாதிகள், அனைவரும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் கேலரியில் அமர்ந்து கொண்டனர். உதயநிதி ஸ்டாலின் மதியம் 12 மணிக்கு செல்லும் வரை, அமர்ந்து கொண்டு ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட்டனர்.

இந்நிலையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிடுவதற்காக சுற்றுலாத்துறையினரால் அழைத்து வரப்பட்ட வெளிநாட்டு சுற்றலாப்பயணிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர், விழா மேடை அருகே தங்கள் கேலரிக்கு செல்ல வழியின்றி காலை 9.30 மணிமுதல் 11.30 மணி வரை வெளியலில் காத்திருந்தனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், வருவாய்துறை அதிகாரிகள் வெளிநாட்டினர் கேலரியில் அமர்ந்திருந்த விஐபி அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் வெளியேற்ற முடியாமல் வெளிநாட்டினரையும் காத்திருக்க வைக்க முடியாமல் பரிதவிப்புக்கும், தர்ம சங்கடத்துக்கும் ஆளாகினர்.

இதற்கிடையில் சுற்றுலாத்துறை அதிகாரிகளையும், வழிகாட்டிகளையும், வருவாய்துறை அதிகாரிகள், நாங்கள் சொன்னபிறகு அழைத்து வந்திருக்கலாமே?, ஏன் உடனடியாக அழைத்து வந்துவிட்டீர்கள்? என்று கடிந்து கொண்டனர். இரு தரப்பினருக்குமான வாக்குவாதமும், வெளிநாட்டினரின் பரிதவிப்பும், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், வெளிநாட்டினர் காத்திருப்புக்கும் மத்தியில் எந்த அதிருப்தியையும், சலசலப்பையும் வெளிகாட்டாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தனர். அவர்களது அமைதியும், பொறுமையின் காரணமா இன்று அப்பகுதியில் பிரச்சினை எதுவும் வரவில்லை.

மதியம் 11.45 மணியளவில் அமைச்சர் உதயநிதி புறப்பட தயாரானதால் வெளிநாட்டினர் கேலரியில் அமர்ந்திருந்த விஐபி அரசியல்வாதிகள், அதிகாரிகள் அங்கிருந்து ஒருவர் பின் ஒருவராக புறப்பட்டு வெளியே வர ஆரம்பித்தனர். பெரும் நிம்மதியடைந்த காவல்துறை அதிகாரிகள், வருவாய்துறை அதிகாரிகள், வெயிலில் காத்திருந்த வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை, அவர்களுடைய கேலரிக்கு அழைத்துவந்து அமர வைத்தனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *