மும்பையில் இருந்து நவிமும்பைக்கு கடல் வழியாக 22 கிலோமீட்டர் நீளத்திற்கு கடல் பாலம் கட்டப்பட்டுள்ளது. இக்கடல் பாலம் தென்மும்பையின் சிவ்ரி என்ற இடத்தில் தொடங்கி அருகில் உள்ள நவிமும்பையில் இருக்கும் நவசேவாவிற்கு கட்டப்பட்டுள்ளது. நவிமும்பையில் புதிய விமான நிலையம் கட்டப்பட்டு வருகிறது. விமான நிலையம் அடுத்த ஆண்டு திறக்கப்படும் நிலையில் அந்த விமான நிலையத்தை பயணிகள் எளிதில் சென்றடையவேண்டும் என்ற நோக்கத்தில் இப்பாலம் 17,840 ரூபாய் கோடியில் கட்டப்பட்டுள்ளது. அதோடு இந்த பாலத்தின் மூலம் புனே, கோவா மற்றும் தென்னிந்தியாவிற்கும் விரைவில் செல்ல முடியும். 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி இந்த கடல் பாலத்திற்கு அடிக்கல் நாட்டினார். இப்போது அவரே கட்டி முடிக்கப்பட்ட கடல் பாலத்தை திறந்து வைத்திருக்கிறார்.

நவிமும்பை உல்வேயில் நடைபெ ற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு இந்த கடல் பாலத்தை திறந்து வைத்தார். விழாவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணைமுதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

கடல் பாலத்தை திறந்து வைத்துவிட்டு நவிமும்பையில் கட்டப்பட்டுள்ள ரயில்வே தட நீட்டிப்பு திட்டத்தையும் , புதிய ரயில் நிலையம் ஒன்றையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

கடல் பாலத்தை திறந்து வைத்துவிட்டு கடல் பாலம் வழியாக பிரதமர் நரேந்திர மோடி மும்பைக்கு வந்தார். பிரதமர் வருகையையொட்டி கொலாபாவில் உள்ள நடைபாதைகள் கடைகள் முற்றிலும் அகற்றப்பட்டது. சுவர்கள் அனைத்தும் பெயிண்ட் அடிக்கப்பட்டு சுத்தமாக வைக்கப்பட்டு இருந்தது.

இப்போது மும்பையில் இருந்து நவிமும்பைக்கு செல்ல 2 மணி நேரம் வரை பிடிக்கிறது. புதிய கடல் பாலத்தில் பயணம் செய்வதன் மூலம் வெறும் 20 நிமிடத்தில் சென்றடைய முடியும். நான்கு சக்கர வாகனங்கள் இந்த மேம்பாலத்தில் 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல முடியும். மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் இந்த மேம்பாலத்தில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இக்கடல் பாலம் நிலநடுக்கம் ஏற்பட்டாலும் பாதிக்காத வகையில் கட்டப்பட்டுள்ளது. 6.5 ரிக்கர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டாலும் கடல் பாலம் பாதிக்கப்படாது. அதோடு கடல் உயிரினங்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக புதிய வாகனங்கள் செல்லும்போது சத்தம் வராமல் இருக்கும் வகையில் இப்பாலம் கட்டப்பட்டுள்ளது.

கடல் பாலத்தில் போடப்பட்டுள்ள மின் விளக்குகள் கூட கடல் உயிரினங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 100 ஆண்டுகள் நிலைத்து நிற்கும் வகையில் கடல் பாலத்தில் கட்டப்பட்டுள்ள தூண்களை கடல் உப்பு நீர் பாதிக்காத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மொத்த பால நீளத்தில் 16.5 கிலோமீட்டர் கடலில் கட்டப்பட்டுள்ளது. எஞ்சிய பகுதி நிலத்தில் கட்டப்பட்டுள்ளது. ஜப்பான் வங்கியில் 16 ஆயிரம் கோடி கடன் வாங்கி கட்டப்பட்டுள்ள இந்த கடல் பாலம் திட்டமிட்டதை விட 6 மாதத்திற்கு முன்பே கட்டி முடிக்கப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இக்கடல் பாலத்தில் கார்கள் ஒரு முறை செல்ல ரூ.250 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கனரக லாரிகள் ஒரு முறை செல்ல 1580 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அடல் சேது | மும்பை கடல் பாலம்

அனைத்து வாகனங்களுக்கும் தினசரி மற்றும் மாதாந்திர பாஸ்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கடல் பாலத்தால் நவிமும்பையை அடுத்து புதிதாக அமைக்கப்பட இருக்கும் மூன்றாவது மும்பைக்கான பணிகளும் விரைவு பெறும். இக்கடல் பால பணிகளை தொடங்குவதில் ஆரம்பத்தில் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டது. பல முறை டெண்டர் விடப்பட்டு ரத்து செய்யப்பட்டது. தற்போது, இந்தப் பாலத்தை பிரதமர் நரேந்திரமோடி, நாட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்துள்ளார். இதில் தினமும் 70 ஆயிரம் வாகனங்கள் செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *