காஞ்சிபுரம்: உத்திரமேரூர் நகரின் பிரதான சாலையில் குறுகிய இடத்தில் செயல்பட்டு வரும் பேருந்து நிலையத்தால், நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் நகருக்கு வெளியே நவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையத்தை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகாவில் ஏராளமான கிராமங்கள் அமைந்துள்ளன. மாவட்ட தலைநகரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் இருந்தாலும் உத்திரமேரூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் வளர்ச்சி திட்டங்கள் ஏதும் பெரிய அளவில் நடைபெறவில்லை என்பது இப்பகுதி மக்களின் கருத்தாக உள்ளது. இதனால், மேற்கண்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு போன்றவற்றுக்காக செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இவ்வாறு மேற்கண்ட பகுதிக்கு செல்லும் பொதுமக்கள், உத்திரமேரூர் நகரப்பகுதியின் பிரதான சாலையில் உள்ள பேருந்து நிலையத்துக்கு சென்று, பேருந்து மூலம் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.

ஆனால், உத்திரமேரூர் பேருந்து நிலையம் குறுகிய இடத்தில் செயல்படுவதால் இங்கிருந்து 30 கிராம பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால், பல்வேறு பேருந்துகளில் பயணித்து காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு மக்கள் செல்கின்றனர்.

மேலும், உத்திரமேரூர் வழியாக வந்தவாசி, திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால், பேருந்து நிலையம் இடநெருக்கடியுடன் செயல்படுவதால் மேற்கண்ட தொலைதூர பேருந்துகள் பேருந்து நிலையத்துக்குள் வராமல், பிரதான சாலையில் நிறுத்தி இயக்க வேண்டிய நிலை உள்ளது.

இதனால், வெளியூர் செல்லும் சுற்றுப்புற கிராமங்கள் மற்றும் உள்ளூரை சேர்ந்த பயணிகள் பேருந்துக்காக பிரதசான சாலையோரம் காத்திருப்பதால், அச்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அதனால், நகருக்கு வெளியே கூடுதலான பேருந்துகள் நிறுத்துவதற்கான இடவசதியுடன் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மணிகண்டன்

இதுகுறித்து, உத்திரமேரூரை சேர்ந்த மணிகண்டன் கூறியதாவது: பேருந்து நிலையத்தால் நகரில் கடந்த பல ஆண்டுகளாக போக்குவரத்து நெரிசலில் பொதுமக்கள் சிக்கி தவித்து வருகின்றனர். நகருக்கு வெளியே அமைக்கப்படும் புறவழிச்சாலை மூலம் போக்குவரத்துக்கு நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். ஆனால், புறவழிச்சாலை பணிகளும் மந்தகதியில் நடைபெற்று வருகிறது.

உத்திரமேரூர் வழியாக திருவண்ணாமலை மற்றும் சென்னைக்கு செல்லும் பேருந்துகள் பிரதான சாலையில் நின்று செல்வதால், கிராமப் பகுதியில் இருந்து வரும் பயணிகள் விவரம் அறியாமல் பேருந்துகளை தவறவிட்டு, மாற்று பேருந்துக்காக நீண்ட நேரம் சாலையில் காத்திருக்கும் நிலை உள்ளது.

மேலும், பேருந்து நிலையம் அருகேயுள்ள குடைவோலை முறை கோயிலை பார்த்து ரசிக்க வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை நிறுத்த, போதிய இடவசதி இல்லாததால் சுற்றுலா வாகனங்கள் அனைத்தும் உத்திமேரூர்-புக்கத்துறை செல்லும் பிரதான சாலையோரம் நிறுத்தப்படுகிறது. நகரில் இருப்பதே ஒரேயொரு பிரதான சாலை, இச்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பேருந்து நிலைய பகுதியை கடந்து செல்ல சுமார் அரைமணி முதல் ஒரு மணி நேரம் ஆகிறது.

இதனால், உள்ளூர் பொதுமக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். அதனால், நகருக்கு வெளியே புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், பேரூராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமல் உள்ளது என்றார்.

இதுகுறித்து, உத்திரமேரூர் பேரூராட்சி அதிகாரிகள் கூறியதாவது: உத்திரமேரூர் பேருந்து நிலையம் கடந்த 1987-88-ம் ஆண்டில் ரூ.10 லட்சம் செலவில் அமைக்கப்பட்டது. மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் நகர வளர்ச்சி காரணமாக தற்போது இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனால், புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்காக உத்திரமேரூர்–வந்தவாசி செல்லும் சாலையில் உள்ள வேடப்பாளையம் கிராமப்பகுதியில் 5.50 ஏக்கர் பரப்பளவிலான மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை தேர்வு செய்துள்ளோம்.

மேலும், இங்கு பேருந்து நிலையம் அமைந்தால் புறவழிற்சாலையில் செல்லும் பேருந்துகள் அனைத்தும் பேருந்து நிலையத்துக்குள் வந்து செல்ல முடியும். அதனால், ரூ.13.79 கோடி மதிப்பில் மேற்கண்ட பகுதியில்பேருந்து நிலையம் அமைக்க திட்டமதிப்பீடு தயாரித்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளோம். விரைவில் அரசின் ஒப்புதல் கிடைக்கும் என நம்புகிறோம் என்றனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *