மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தை தெப்பத் திருவிழாவை முன்னிட்டு இன்று கொடியேற்றம் நடைபெற்றது. முக்கிய விழாவான தெப்பத்திருவிழா ஜன.25ம் தேதி நடைபெறவுள்ளது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் தை தெப்பத் திருவிழா ஜன.14 முதல் 25-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு முதல் நாளான இன்று காலை 10.50 மணியளவில் சுவாமி சன்னதி முன்பு சிறப்பு அலங்காரத்தில் பிரியாவிடை சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் எழுந்தருளினர்.

அலங்கரிக்கப்பட்டிருந்த தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். கோயில் இணை ஆணையர் ச.கிருஷ்ணன், அறங்காவலர்கள் எம்.செல்லையா, மு.சீனிவாசன், எஸ்.மீனா, டி.சுப்புலெட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் நான்கு சித்திரை வீதிகளில் பஞ்சமூர்த்திகளுடன் அம்மன், சுவாமி புறப்பாடு நடைபெறும். அதனைத்தொடர்ந்து ஜன.19-ல் திருஞானசம்பந்தர் சுவாமிகள் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை, ஜன.21-ல் மச்சகந்தியார் திருமணம், ஜன.22-ல் இரவு சப்தாவர்ணம் எடுப்புத் தேரில் சுவாமி எழுந்தருள்வர். ஜன.23-ல் 10-ம் நாள் தெப்பம் முட்டுத் தள்ளுதல், ஜன.24-ல் 11-ம் நாள் கதிரறுப்பு திருவிழா நடைபெறும்.

முக்கிய விழாவான தெப்ப உற்சவத்தன்று ஜன.25-ல் அதிகாலையில் மீனாட்சி, சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன் கோயிலில் இருந்து புறப்பாடாகி, வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் சென்று தெப்பத்தில் காலையில் 2 முறையும், அன்றிரவு மின் அலங்காரத் தெப்பத்தில் எழுந்தருள்வர். பின்னர் 10 மணிக்குமேல் கோயிலுக்கு திரும்புகின்றனர். அத்துடன் திருவிழா நிறைவுபெறுகிறது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *