பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் 1000 ரூபாய் ரொக்கம், 1 கிலோ பச்சை அரிசி, சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். மத்திய, மாநில அரசு பணிகளில் உள்ளவர்கள், வருமான வரி செலுத்துவோர், சர்க்கரை அட்டைதாரர் ஆகியோருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு கிடையாது என முதலில் அறிவிப்பு வெளியானது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், இந்த கட்டுப்பாடு ஆளும்கட்சியினருக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தும் என தகவல் வெளியானதை தொடர்ந்து, அனைத்து குடும்ப அட்டைதார்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தமிழக முதல்வர் முடிவெடுத்தார். பொங்கல் பரிசு தொகுப்புடன், வழக்கம்போல் விலையில்லா வேட்டி புடவையும் வழங்கப்படும் என தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்தார்.

அமைச்சர் சக்கரபாணி

இந்நிலையில்தான் கடந்த சில நாள்களாக பொங்கல்பரிசு தொகுப்பு விநியோகம் செய்யும் பணி ரேஷன் கடைகளில் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான முறைகேடுகள் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. திருவாரூர் மாவட்டம் கொராடாச்சேரி அருகில் உள்ள எண்கண் கிராமத்தில் 120-க்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்கள்களுக்கு கரும்பு, புடவை, வேட்டி உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய சன்னதி தெருவைச் சேர்ந்த சாமிநாதன், “பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்குறதுக்காக, எங்க ஊர் ரேஷன் கடைக்கு நேற்று போனேன். எனக்கு 1,000 ரூபாய் பணம், 1 கிலோ பச்சை அரிசி, 1 கிலோ சர்க்கரை கொடுத்தாங்க. ஆனா… கரும்பு, புடவை, வேட்டி கொடுக்கலை. எனக்கும் மட்டும் தான் இப்படியானு தெரிஞ்சுக்குறதுக்காக, சுமார் 3 மணிநேரம் அங்கயே இருந்தேன். அப்ப பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்க வந்த மக்கள் யாருக்குமே கரும்பு, புடவை, வேட்டி கொடுக்கவே இல்லை. இது சம்பந்தமா ரேஷன் கடை ஊழியர்கிட்ட கேட்டதுக்கு, ‘’ரொம்ப குறைவான எண்ணிக்கையில தான் இந்த பொருள்கள் வந்துச்சு. அதை கொடுத்து முடிச்சுட்டோம்னு சொன்னாங்க. ஆனா அவங்க வச்சிருந்த பதிவேட்டுல… 1000 ரூபாய், 1 கிலோ சர்க்கரை, 1 கிலோ பச்சை அரிசி, கரும்பு, புடவை, வேட்டி பெற்றுக்கொண்டதா எங்ககிட்ட கையெழுத்தி வாங்கியிருந்தாங்க. எல்லா பொருள்களும் கொடுக்கப்பட்டதாக எங்க செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்துருக்கு. இதுல மிகப்பெரிய அளவுல முறைகேடு நடந்திருக்கு’’ என தெரிவித்தார்.

இவரை இன்னும் பலர் நம்மிடம் இதே குற்றச்சாட்டை முன் வைத்தனர். எண்கண் கிராமத்தில் மட்டுமல்ல… இதன் அருகில் உள்ள ஆயிக்குடி கிராமத்திலும் இதே குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அங்கு 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு கரும்பு, புடவை, வேட்டி உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்படவில்லை என்று மக்கள் கொந்தளிக்கிறார்கள்.

இது தொடர்பாக திருவாரூர் மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் அலுவலரிடம் பேசினாம். ‘’உடனடியா விசாரிக்கிறேன்’’ என தெரிவித்தார். அடுத்த சில நிமிடங்களில் திருவாரூர் வட்ட உணவு வழங்கல் அலுவலர் பூபதி நம்மிடம் பேசினார். அனைத்து தகவல்களையும் கேட்டுக்கொண்டவர், உடனடியாக நேர்ல போயி, முறையான விசாரணை செய்றோம் என தெரிவித்தார். மறுநாள் மதியம் நம்மை தொடர்பு கொண்டவர், சம்பந்தப்பட்ட ரேஷன் கடைக்கு போயி விசாரணை நடத்தினோம். மக்களுக்கு தர வேண்டிய பொருள்கள், பொங்கல் விடுமுறை முடிஞ்சதும் வழங்கப்படும்’’ என தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசு

ஆனால் தவறு செய்த ஊழியர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக எதுவும் தெரிவிக்கவில்லை. எண்கண் மக்களிடம் நாம் பேசியபோது, ’’இங்க எந்த ஒரு அதிகாரியும் வரவே இல்லை. விசாரணை நடக்கலை’’ என தெரிவித்தார். பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் தமிழ்நாடு முழுக்கவே பல ஊர்களில் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக ஆதங்க குரல்கள் ஒலிக்கின்றன. இது தொடர்பாக விளக்கம் பெற, உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணியை தொடர்புகொள்ள முயன்று வருகிறோம்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *