கோவை: கோவையில் அரசு அலுவலகங் களில் நேற்று சமத்துவ பொங்கல் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமை வகித்தார். அலுவலக வளாகத்தில் கோலமிட்டு அங்கு அமைக்கப்பட்டிருந்த அடுப்பில் மண் பானையை வைத்து பெண் ஊழியர்கள் பொங்கலிட்டனர்.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் மோ.ஷர்மிளா உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் திரளாக பங்கேற்றனர். ஆட்சியர் உள்ளிட்ட அலுவலர்கள் அனைவரும் பாரம்பரிய வேட்டி, சட்டை அணிந்தும், பெண் ஊழியர்கள் புடவை அணிந்தும் விழாவில் பங்கேற்றனர். ஊழியர்களுடன் சேர்ந்து மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி ஜமாப் இசைக்கு நடனமாடினார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்த பொங்கல் விழாவில்

ஊழியர்களுடன் ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நடனமாடினார்.

மாநகராட்சி அலுவலகம்: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் தலைமை வகித்தனர். துணை மேயர் ரா.வெற்றிச்செல்வன், துணை ஆணையர்கள் செல்வசுரபி, சிவக்குமார், மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டி நிறுத்தப்பட்டிருந்தது. தொடர்ந்து கோலப்போட்டி, உறி அடித்தல், விரைவாக சமையல் செய்தல், பொங்கல் பானையை அலங்கரித்தல், இசை நாற்காலி போட்டி, பாரம்பரிய ஆடை அணிதல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள் உள்ளிட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். தொடர்ந்து கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடந்த பொங்கல்விழாவில் கலந்து

கொண்ட மேயர் கல்பனா ஆனந்தகுமார், ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோர்.

படங்கள்: ஜெ.மனோகரன்

காவல்துறை: கோவை மாநகர காவல்துறை சார்பில், காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் பொங்கல் விழா நடந்தது. நிகழ்வில், காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன், துணை ஆணையர்கள் சண்முகம், சுகாஷினி, உதவி ஆணையர்கள் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து காவல் ஆணையர் வே,பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘பொங்கல் பண்டிகையையொட்டி, கடந்த சில நாட்களாக மக்கள் அதிகம் கூடும் இடங்களான ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் சாலை, காந்திபுரம் மற்றும் மாநகரில் உள்ள அனைத்து பேருந்து நிலையங்கள் ஆகிய இடங்களில் காவலர் பந்தோபஸ்து போடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.

நூறு சதவீதம் போதைப் பொருட்கள் இல்லாத கோவை மாநகரை உருவாக்க வேண்டும் என்ற முனைப்போடு இளைஞர்களை எல்லாம் சேர்த்து 100 கிலோ மீட்டர் சைக்கிள் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

போதைப் பொருட்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, போதைப் பொருட்கள் பக்கம் இளைஞர்கள் செல்லாமல், உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியத்தை பேணக்கூடிய வகையில் பயிற்சிகளில் ஈடுபடுத்துவதற்காக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

இதேபோல், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்த பொங்கல் விழாவுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தலைமை வகித்தார். இதில், காவல்துறை அதிகாரிகள், அமைச்சுப் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *