எண்ணெய் கசிவு விவகாரத்துக்காக சென்னை பெட்ரோ கெமிக்கல் நிறுவனம் ( சிபிசிஎல்) நிறுவனத்தை மூடினால் தமிழகத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் இந்திய கடலோர காவல் படையின் கிழக்கு மண்டல ஐஜி தோனி மைக்கேல் கூறியுள்ளாா்

இந்திய கடலோர காவல் படையும் ஜப்பான் கடலோர காவல் படையும் இணைந்து சென்னை கடலோரத்தில் கடந்த 8-ஆம் தேதி முதல் பயிற்சி மற்றும் ஒத்திகையில் ஈடுபட்டு வந்தது. இந்த பயிற்சி வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றதை அடுத்து, சென்னை அருகே நடுக்கடலில், தத்ரூபமான ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் தோனி மைக்கேல் கூறியதாவது: இந்தியா- ஜப்பான் இடையே செய்து கொள்ளப்பட்ட பாதுகாப்பு உடன்பாடு அடிப்படையில் இரு நாடுகளும் இணைந்து இத்தகைய கூட்டு பயிற்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நிகழாண்டு ஜப்பானின் கடலோரக் காவல் படை கப்பல் ‘ யாகிமா’ சென்னை வந்து தொடா் பயிற்சியில் ஈடுபட்டது.

கடலில் பாதிப்பில்லை: இந்திய கடலோர காவல் படை கடல் சாா்ந்த பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளில் தொடா்ந்து ஈடுபட்டு வருகிறது. அண்மையில் எண்ணூா் அருகே சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய எண்ணெய் கசிவு காரணமாக கடல் நீா் மாசடைந்தது. இந்த எண்ணெய் படலத்தை அகற்றும் பணியில் கடலோரக் காவல் படை முழு வீச்சில் ஈடுபட்டதன் காரணமாக கழிவுகள் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளன. கடலில் தற்போது எந்தவித பாதிப்பும் இல்லை.

எண்ணெய் கசிவு சம்பவத்துக்காக சிபிசிஎல் நிறுவனத்தை மூடிவிட முடியாது. அவ்வாறு மூடினால் தமிழகத்தில் பெட்ரோல்- டீசல் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உருவாகும். பொதுவாக கடலோரப் பகுதிகளில் ஏற்படும் எண்ணெய் கழிவுகள் போன்ற மாசுகளை அந்தப் பகுதியில் உள்ள துறைமுகம் தான் மீட்டெடுக்கும். இதற்காக பிரத்யேக அதிகாரங்கள் துறைமுகத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. அந்த வகையில் தற்போது எண்ணூா் பகுதியில் ஏற்பட்ட கசிவு சம்பந்தப்பட்ட துறைமுகத்தின், ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் மூலமாக அகற்றப்பட்டுள்ளது.

காப்பீடு மூலம் பெற முடியுமா? கடலுக்குள் கப்பல்கள் மூலமாக எண்ணெய் கசிவு ஏற்பட்டால் கப்பல் நிறுவனங்கள் எடுத்து வைத்திருக்கும் காப்பீடு (இன்சூரன்ஸ் ) மூலம் ஆயிரம் கோடி ரூபாய் வரை அபராதம் விதித்து நிவாரணத்தொகை பெற முடியும். ஆனால் கடற்கரையோரம் இருக்கும் சிபிசியில் நிறுவனம் போன்றவற்றில் ஏற்படும் கசிவால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அவ்வாறு பெருந்தொகையை பெற முடியாது. குறைந்த தொகையை மட்டுமே காப்பீடு மூலம் பெற முடியும். இது போன்ற பிரச்னைகளை அரசு கையாண்டு தீா்வு காணும் என்றாா் அவா்.

பேட்டியின் போது உடன் இருந்த ஜப்பான் கடலோர காவல் படை கப்பலின் கேப்டன் யுச்சி மோட்டோயாமா கூறுகையில், இந்தியாவில் கடலோர காவல் படையுடன் இணைந்து தங்கள் நாட்டு வீரா்கள் பயிற்சி எடுத்தது மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது என்றாா். ஏற்கனவே இந்தியாவுடன் கடலோர பாதுகாப்பு சாா்ந்த ஒத்திகை மற்றும் பயிற்சிகளில் தொடா்ந்து ஜப்பான் ஈடுபட்டு வருகிறது இதன் மூலம் இரு நாடுகளுக்கும் நல்ல அனுபவம் கிடைக்கிறது எதிா்காலத்திலும் இத்தகைய நடவடிக்கைகள் தொடரும் என்றாா் அவா்.

செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *