போபால்: மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் தெரு நாய்கள் கூட்டம் ஒன்று தாக்கிக் கடித்ததால் ஏழு மாத ஆண் குழந்தை மரணமடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

போபாலின் அயோத்தியா நகர் பகுதியில் புதன்கிழமை நடந்த இந்தக் கொடூர நிகழ்வு குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, சம்பவம் போலீஸார் மற்றும் அதிகாரிகளின் கவனத்துக்கு வந்தது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் அவர், “சம்பவம் நடந்த அன்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், குழந்தையை புதைத்திருந்த இடத்தில் இருந்து இன்று (சனிக்கிழமை) உடலை தோண்டி எடுத்த போலீஸார், அதனை உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்” என்றார்.

இந்தச் சம்பவம் குறித்து அயோத்தியா நகர் காவல் நிலைய ஆய்வாளர் மகேஷ் நில்ஹர் கூறுகையில், “இறந்த குழந்தை, கூலித் தொழிலாளியின் குடும்பத்தினைச் சேர்ந்தது. சம்பவத்தன்று குழந்தையின் தாய் அதனை தரையில் படுக்க வைத்துவிட்டு அருகில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தெரு நாய்களின் கூட்டம் ஒன்று குழந்தையைக் கடித்து இழுத்துச் சென்றது. அருகில் இருந்தவர்கள் கூச்சலிட்டு கத்தி எச்சரிக்கை செய்தனர். அதற்குள் அந்த நாய்கள் கூட்டம், குழந்தையின் கையைத் துண்டாக்கியிருந்தன. குழந்தையை கடித்து குதறியதில் சம்பவ இடத்திலேயே குழந்தை இறந்தது.

குனா மாவட்டத்தைச் சேர்ந்த அக்கூலித் தொழிலாளி குடும்பத்தினர், குழந்தையை போபால் அருகே உள்ள ஒரு கிராமத்தில் புதைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

இதனிடையே, பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரண நிதியாக மாவட்ட நிர்வாகம் ரூ.50,000 வழங்கியுள்ளது. மேலும் 50,000 விரைவில் வழங்கப்படும். போபால் மாநகராட்சி (BMC) அயோத்தியா நகர் பகுதியில் இருந்து 8 தெரு நாய்களை பிடித்துள்ளது. மேலும்,தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு உள்ளாட்சி அமைப்புகளை மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *