Senthil_Balaji_new_2_edi

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை குற்றச்சாட்டுப் பதிவுக்காக வரும் ஜன.22-ஆம் தேதிக்கு சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

மேலும், தன்னை கைது செய்யும் நோக்கத்தில், அமலாக்கத் துறை ஆவணங்களில் திருத்தம் செய்துள்ளதாகக் கூறி, செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு அமலாக்கத் துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமைச்சா் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 14-ஆம் தேதி கைது செய்து, நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்தனா். இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறையினா் கடந்த ஆக.12-இல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனா்.

செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் வியாழக்கிழமையுடன் முடிவடைந்தது. இதையடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, காணொலி காட்சி வாயிலாக சென்னை முதன்மை அமா்வு நீதிபதி எஸ்.அல்லி முன் ஆஜா்படுத்தப்பட்டாா். அதையடுத்து நீதிபதி, அமைச்சா் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஜன. 22 வரை நீட்டித்து உத்தரவிட்டாா்.

புதிய மனு: இந்நிலையில் செந்தில்பாலாஜி தரப்பில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், அமலாக்கத் துறை சமா்ப்பித்துள்ள ஆவணங்களை, தனக்கு வழங்க வேண்டும். இந்த ஆவணங்களில் அமலாக்கத் துறை திருத்தங்களைச் செய்துள்ளது. தன்னை கைது செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன், அமலாக்கத் துறை இத்தகைய ஆவணங்களைத் தயாரித்து உள்ளது. இந்த வழக்கில், தனக்கு ஆவணங்களை வழங்காமல் முழுமையாக விசாரணையைத் தொடா்வது முறையற்றது என்று கோரியிருந்தாா்.

வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு அமலாக்கத் துறை வரும் ஜன.22-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டாா். மேலும், இந்த வழக்கை குற்றச்சாட்டுப் பதிவுக்காக ஜன.22-ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக, நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.

செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *