திருநெல்வேலி / தூத்துக்குடி / தென்காசி / நாகர்கோவில்: திருநெல்வேலி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் நேற்று பகல் முழுவதும் பரவலாக மழை பெய்தது.

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அதிகபட்சமாக ஊத்து பகுதியில் 37 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. மாஞ்சோலையில் 35, காக்காச்சியில் 30, நாலுமுக்கில் 31 மி.மீ. மழை பெய்துள்ளது.

பிற இடங்களில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்): அம்பாசமுத்திரம்- 5, சேரன் மகாதேவி- 20.60, மணிமுத்தாறு – 7.60, நாங்குநேரி – 3.60, பாளையங் கோட்டை – 2.40, பாபநாசம் – 11, ராதாபுரம் – 1.40, திருநெல்வேலி- 1.80, சேர்வலாறு அணை – 10, கன்னடியன் அணைக்கட்டு – 9.20, களக்காடு- 0.80, மூலைக்கரைப் பட்டியில் 3 மி.மீ மழை பெய்து ள்ளது. பாபநாசம் அணை நீர்மட்டம் 141.95 அடியாக இருந்தது. அணைக்கு விநாடி க்கு 1,509 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 1,666 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.

மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 115.01 அடியாக இருந்தது. அணைக்கு உள்வரத்தாக வரும் 1,458 கன அடி தண்ணீர் உபரியாக திறந்து விடப்படுகிறது. இதனிடையே நேற்று பிற்பகலில் மாவட்ட ஆட்சியர் கா.ப. கார்த்திகேயன் வெளியிட்ட அறிவிப்பில், “திருநெல்வேலி மாவட்டத்தில் மலைப் பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. எனவே, தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகளில் நீர்வரத்து அதிகரிக்கும். பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார். திருநெல்வேலி, பாளையங் கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலையி லிருந்து மாலை வரை மிதமான மழை பெய்தது.

பள்ளிகளுக்கு விடுப்பு: இந்நிலையில், நேற்று மதியம் திடீரென பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. “கன மழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, அந்தந்த பகுதிகளில் நிலவும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு பள்ளி நிர்வாகங்கள் உணவு இடைவேளைக்கு பின் விடுமுறை அளித்துக்கொள்ளலாம். தேர்வுகள் இருந்தால் அதனை முடித்துவிட்டு அனுப்ப வேண்டும்” என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பான தகவல்கள் அந்தந்த பள்ளி ஆசிரியர்களிடம் இருந்து பெற்றோர்களுக்கு செல்போன் மூலம் தெரிவிக்கப் பட்டதை அடுத்து, பெற்றோர் பள்ளிகளுக்கு வந்து குழந்தைகளை அழைத்துச் சென்றனர். மாணவர்களை அழைத்துச் செல்ல ஆட்டோ, கார், வேன் களும் பள்ளிகளுக்கு ஒரே நேரத்தில் வந்ததால் மாநகரில் பள்ளிகள் அமைந்துள்ள முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் நேற்று காலையில் இருந்து பல்வேறு பகுதிகளில் மிதமான மழை தூறிக்கொண்டே இருந்தது. நேற்று காலை வரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக சிவகியில் 20 மி.மீ. மழை பதிவானது. குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் மாலை வரை விட்டுவிட்டு கனமழை பெய்தது. தூத்துக்குடி, திருச்செந்தூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம், குலசேகரன்பட்டினம், சாத்தான் குளம், ஸ்ரீவைகுண்டம், கருங் குளம், செய்துங்க நல்லூர் பகுதிகளில் நேற்று காலை சுமார் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகள், தெருக்கள், தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

ஏற்கெனவே கடந்த மாதம் 17, 18-ம் தேதிகளில் பெய்த அதி கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நிலைகுலைந்து போயிருந்த மக்கள், அதில் இருந்து மீண்டு வரும் நிலையில் இந்த மழை மக்களை மேலும் கவலையடையச் செய்துள்ளது. அதேவேளையில் மீனவர்கள் நேற்று வழக்கம்போல் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

“தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதாலும், இன்றும் (ஜன.10) கனமழை எச்சரிக்கை உள்ளதாலும் தாமிரபரணி ஆற்றில் அதிகப்படியான மழைநீர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள், உப்பாத்து ஓடை கரையோர பகுதியில் குடியிருக்கும் மக்கள் பாதுகாப் பாக இருக்க வேண்டும்” என்று, ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்) : ஸ்ரீவைகுண்டம் 4.20, சாத்தான் குளம் 2, கழுகு மலை 3, கயத்தாறு 3, கடம்பூர் 16, எட்டயபுரம் 3.20, விளாத்திகுளம் 17, காடல்குடி 9, வைப்பார் 4, சூரன்குடியில் 4 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று அதிகாலையில் இருந்தே பரவலாக மிதமான மழை பெய்தது. மழையால் காலையில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகளும், பணிக்கு செல்லும் ஊழியர்களும் மழையில் நனைந்தவாறு சென்றனர். பகலில் மழை நின்ற போதிலும் குளிர்காற்று வீசியது.

கடந்த சில நாட்களாக குமரி மாவட்டத்தில் கோடை காலம் போன்று வெயில் வாட்டி வதைத்த நிலையில் நேற்று பெய்த மிதமான மழையால் வெப்பம் தணிந்தது. கனமழை இல்லாததால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கவில்லை. பேச்சிப் பாறை அணைக்கு விநாடிக்கு 508 கனஅடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருந்தது. நீர்மட்டம் 46 அடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து 541 கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 73.52 அடியாக உள்ள நிலையில், அணைக்கு நீர்வரத்து 114 அடியாக உள்ளது. அணையில் இருந்து 250 கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *