சென்னை: சென்னையில் அண்மையில் புது வகையான மோசடி ஒன்று அரங்கேறி உள்ளது. செல்வந்தர்கள், முதியவர்களை குறி வைத்து நடைபெறும் இந்த வகை மோசடியில் பணத்தை இழக்காமல் உஷாராக இருக்கும்படி சைபர் க்ரைம் போலீஸார் எச்சரித்துள்ளனர்.

காலம் மாறிவிட்டது. குடும்பத்தினர், உறவினர், பக்கத்து வீட்டுக்காரர், சக பணியாளரிடம் மேற்கொள்ளும் தகவல் பரிமாற்றங்களை விட யாரேன்றே முகம் தெரியாத, அறிமுகம் இல்லாத நட்புகளுடன் நேரத்தை செலவிடுவது அதிகரித்துவிட்டது. ஒரே குடும்பத்தில், ஒரே அறையில் இருப்பவர்கள் கூட ஆளுக்கொரு செல்போன்களை கையில் வைத்துக் கொண்டு சமூக வலைதளங்களில் மூழ்கி கிடக்கின்றனர். அந்த வகையில் ஒன்றுதான் ஆன்லைன் டேட்டிங்.

இந்த செயலிகளில் பயனாளர்கள் கட்டும் கட்டணத்தை பொறுத்து, அதாவது அதிக கட்டணம் செலுத்தினால் அதற்கு தகுந்தார்போல், அனைத்து தரப்பு வயதினரையும், நபரையும் பார்க்க முடியும். நமக்கு பிடித்தமானவர்களை தேர்வு செய்ய கோரிக்கையும் விடுக்கலாம்.

இப்படி அதிக கட்டணம் கட்டுவோர் பெரும்பாலும் பொருளாதார ரீதியில் ஒருபடி உயர்ந்தவர்களாக இருப்பார்கள். இவர்களை குறி வைத்து, மோசடிக்காரர்கள் போலியான ஆன்லைன் சுய விவரங்களை வடிவமைத்து பயனாளர்களாக நுழைந்து, பிற நபருடன் டேட்டிங்கில் ஈடுபட்டு அவர்களிடமிருந்தே நூதன முறையில் பணம் பறித்து வருகின்றனர். இதில், உஷாராக இருக்கும்படி சென்னை சைபர் க்ரைம் போலீஸார் அறிவுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து சென்னை சைபர் க்ரைம் போலீஸார் கூறியதாவது: டேட்டிங் வலைதளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் தனிமையில் இருப்போர், குறிப்பிட்ட வயதை தாண்டியவர்கள், துணை தேடுபவர்கள், எதிர் பாலினத்தவர்களுடன் பேச துடிப்பவர்கள் என பல தரப்பினர் இந்த வலைதளங்களை அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.

இவற்றுக்குள் வெளிநாட்டு மோசடி கும்பல் போலி அடையாளங்களுடன் ஊடுருவுகிறது. அப்படி குறிப்பிட்ட நபர்களை குறிவைத்து அவர்களுடன், தகவல் பரிமாற்றம் (சாட்) செய்ய ஆரம்பிக்கும். ஆண் என்றால் பெண் போலவும், பெண் என்றால் ஆண் போலவும் பழகுவார்கள்.

நம் மூலமே நமது அத்தனை தகவல்களையும் தெரிந்து கொள்வார்கள். நாட்கள் செல்ல… செல்ல… நம் மீது அதிக அக்கறை, கரிசனம் செலுத்துவதுபோல பாவனை செய்வார்கள். அன்பு மழை பொழிவதுபோல் மயக்கும் வார்த்தை ஜாலங்களை பயன்படுத்துவார்கள்.

மேலும், நமது ஆர்வத்தை தூண்டி நமது நம்பிக்கை, நன்மதிப்பை பெறுவார்கள். பின்னர், படிப்படியாக நமது தனிப்பட்ட தகவல்களை நாமே பகிர்ந்து கொள்ளும் நிலைக்கு கொண்டு வருவார்கள். நமது செல்போன் எண்களை பெற்று போனிலும் பேச்சு நீளும். நம்மிடம் நன்மதிப்பை, நம்பிக்கையை பெற்றுவிட்டது உறுதி செய்த பின்னர் திடீரென எனக்கு இரட்டிப்பு பணம் கிடைத்து விட்டது என உற்சாக முழக்கமிடுவார்கள்.

இப்படி பலமுறை செய்வார்கள். எதிர் தரப்பினரே இதுபற்றி அவர்களிடம் கேட்கும்வரைக்கும் அவர்களின் இந்த செயல்பாடு தொடரும். ஒரு கட்டத்தில் எதிர் தரப்பினர் அதுபற்றி கேட்டு விடுவார்கள். அப்போது, நான் ஆன்லைனில் முதலீடு செய்தேன், கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தேன் எனக்கு இரட்டிப்பு பணம் லட்சக்கணக்கில் கிடைத்துவிட்டது என அளந்து விடுவார்கள்.

வேண்டுமானால் நீங்களும் முதலீடு செய்து முயற்சித்து பாருங்கள் என நமது ஆசையை தூண்டுவார்கள். அவர்கள் மேல் உள்ள நம்பிக்கையிலும், இரட்டிப்பு பண ஆசையிலும் நாம் முதலீடு செய்ய ஆரம்பிப்போம். அது அவர்கள் உருவாக்கி வைத்துள்ள ஒரு போலியான இணையதளமாக இருக்கும்.

முதலில் லாபம் வருவதுபோல் ஆசையை தூண்டுவார்கள். பின்னர் பெரிய தொகையை முதலீடு செய்ய வைத்து மொத்தத்தையும் சுருட்டிவிட்டு தொடர்பை துண்டித்து விடுவார்கள். இந்த கும்பல் பல்வேறு வெளிநாடுகளில் கால்சென்டர் வைத்து பணியாளர்களை நியமித்து இதுபோன்று லட்சக்கணக்கில் பணம் பறித்து வருகிறது.

வயது முதிர்ந்தும் திருமணமாகாதவர்கள், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள், செல்வந்தர்கள் என பலர் இதுபோன்ற மோசடிக்காரர்களிடம்அதிகளவில் பணத்தை இழந்துள்ளனர். மேலும், இக்கும்பலைச் சேர்ந்தவர்கள் எதிர் தரப்பினரின் வங்கி, ஏடிஎம் கார்டு விவரங்களை பெற்றும், அந்தரங்க புகைப்படங்களை அனுப்ப வைத்தும், அதை வெளியிட்டு விடுவதாக மிரட்டியும் பணம் பறிப்பார்கள்.

இது சென்னையில் தற்போது அரங்கேற ஆரம்பித்துள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை மத்திய குற்றப் பிரிவில் உள்ள சைபர் க்ரைம் பிரிவில் புகார் அளித்து வருகின்றனர். கூடுதல் காவல் ஆணையர் செந்தில்குமாரி மேற்பார்வையில், துணை ஆணையர் கீதாஞ்சலி தலைமையிலான தனிப்படை போலீஸார் இதுபோன்ற வழக்குகளில் துப்பு துலக்கி வருகின்றனர். எனவே, விழிப்புடன் இருந்து மோசடிகளில் இருந்து ஏமாறுவதை தவிர்ப்போம் என காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவுரை வழங்கி உள்ளார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *