சென்னை: போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ள நிலையில் நேற்று 95% அரசுப் பேருந்துகள் இயங்கியதாக அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது.

போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு தர வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்கப் பேரவை, டிடிஎஸ்எப், எச்எம்எஸ் உள்ளிட்ட சங்கங்கள் வேலைநிறுத்தம் தொடங்கின.

நேற்று காலை முதலே சென்னையின் பல்வேறு பணிமனைகளில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து பணிமனைகளிலும் அசம்பாவிதம் ஏதும் நிகழாதவாறு தடுக்க போலீஸார் பணியில் ஈடுபட்டனர். பேருந்து இயக்கத்துக்கு இடையூறு செய்யும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்தனர்.

இதற்கிடையே, வேலைநிறுத்தத்தால் பொதுமக்கள் பாதிக்காத வகையிலான நடவடிக்கைகளை போக்குவரத்துத் துறை மேற்கொண்டது. சாலை போக்குவரத்து நிறுவனத்தில் பயிற்சி பெற்ற ஓட்டுநர்கள், பணிமனை ஓட்டுநர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்து ஓட்டுநர்களை வரவழைத்து பொதுப் போக்குவரத்து தடைபடாதவாறு பேருந்துகளை இயக்கினர்.

சென்னையில் காலை முதலே மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ், அய்யப்பன்தாங்கல் உள்ளிட்ட பணிமனைகளில் ஆய்வு மேற்கொண்டு பேருந்துகளை அட்டவணைப்படி இயக்க அறிவுறுத்தினார். கோயம்பேடு உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “தமிழகம் முழுவதும் பேருந்துகளை முழுவதுமாக இயக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கான அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என்பதில் எங்களுக்கு கருத்து வேறுபாடு இல்லை. ஆனால், கடந்த அதிமுக ஆட்சியில் வைக்கப்பட்ட நிதி சுமை, கரோனா காலத்தில் ஏற்பட்ட பொருளாதார தேக்கம், மழை பாதிப்பு ஆகிய காரணங்களால் அவகாசம்தான் கேட்கிறோம். எனவே, அதை போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்” என்றார்.

அதேநேரம், மாநிலம் முழுவதும் பேருந்து இயக்கம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. இது தொடர்பான தகவலும் அவ்வப்போது வெளியானது. அதன்படி, தமிழகத்தில் 95.88 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையிலும் 95 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டதாக மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்தது.

இதுதொடர்பாக போக்குவரத்து தொழிலாளர்கள் கூறும்போது, “நேற்று முன்தினம் காலையில் பணிக்கு வந்தவர்களைத் தொடர்ச்சியாக 16 மணி நேரத்துக்கு மேலாக பணிபுரிய வைத்துள்ளனர். மேலும், தற்காலிக ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் மட்டுமே வழங்கப்படுகிறது. ஒரு வழித்தடத்தில் ஒரு நடை பேருந்தை இயக்கிவிட்டு, போர்டை மாற்றி அடுத்த வழித்தடத்தில் பேருந்தை இயக்கி கணக்கு காட்டுகின்றனர்” என்றனர்.

சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன் கூறும்போது, “அரசியல் காரணங்களுக்காக போராட்டம் நடத்துவதாக குற்றம்சாட்டுவதில் எந்தவித நியாயமும் இல்லை. அரசு உடனே கோரிக்கைகளை ஏற்று வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

மாநிலம் முழுவதும் பேருந்து நிலையங்கள் முன்பு சட்ட விரோதமாக இயக்கப்படும் பேருந்துகளை மறிக்கும் போராட்டம் நாளை (இன்று) நடைபெறும். சென்னையில் மாநகர போக்குவரத்து கழக தலைமையகமான பல்லவன் இல்லத்தில் முற்றுகை போராட்டம் நடைபெறும்” என்றார்.

அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர்.கமலகண்ணன் கூறும்போது, “50 சதவீத ஊழியர்கள் பணிக்குச் செல்லவில்லை. எனினும் பேருந்து ஓடியதாக அரசு பொய்க் கணக்கு காட்டுகிறது. அகவிலைப்படி விவகாரத்தில் தீர்வு ஏற்பட்டால் வேலைநிறுத்தம் திரும்பப் பெறப்படும். அதே நேரம், நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்படுவோம்” என்றார்.

இந்நிலையில், அமைச்சர் சிவசங்கர் தனது முகநூல் பக்கத்தில், “96 மாத காலமாக ஓய்வுபெற்றவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சொல்லியிருக்கிறார். அதன்படி, 65 மாத காலம் அகவிலைப்படி கொடுக்காமல் இருந்தது அதிமுக அரசுதானே” என கேள்வியெழுப்பியுள்ளார்.

போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தத்துக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் முதல்வழக்காக விசாரணைக்கு வரவுள்ளது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *