திண்டுக்கல்: திண்டுக்கல்லில் 4 மணி நேரம் கொட்டித் தீர்த்த கனமழையால், சாலைகளில் மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து ஆறாக ஓடியது. வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்ததால் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர்.

கனமழைக்கு அதிக வாய்ப்புள்ள மாவட்டங்கள் என வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில் திண்டுக்கல் மாவட்டம் இடம்பெறவில்லை. இதனால், நேற்று கனமழை பெய்யும் என்று யாரும் நினைத்துக்கூட பார்க்கவில்லை. இந்நிலையில், நேற்று காலை 5 மணி முதலே திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை பெய்யத் தொடங்கியது. காலை 6 முதல் 7 மணி வரை மிதமான மழை பெய்து கொண்டிருந்தது. இது 7 மணி முதல் கனமழையாக உருவெடுத்து, காலை 10 மணி வரை கொட்டித் தீர்த்தது.

இதனால் திண்டுக்கல் நகரின் மையப் பகுதியான கடை வீதி, வெள்ளை விநாயகர் கோயில்பகுதி, ஆர்.எம்.காலனி, விவேகானந்த நகர் பகுதிகளில் மழை நீர் ஆறாக ஓடியது. திண்டுக்கல் ஒத்தகண் பாலத்தின் கீழ் செல்லும் சாலையில் மழை நீர் ஓடியதால், வேடபட்டிக்கு போக்குவரத்து தடைபட்டது. பாரதிபுரம், பேகம்பூர் பகுதி சாலைகள் ஓடை போல் காணப்பட்டன. இதனால் வீடுகளுக்குள் மழைநீருடன் சேர்ந்து கழிவுநீரும் புகுந்ததால், பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகினர்.

அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தை மழைநீர் சூழ்ந்ததால், பள்ளிக்கு சென்ற மாணவிகள் சிரமத்துக்கு ஆளாகினர். பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக பள்ளி வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சைக்கிள்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. திண்டுக்கல் மேற்கு காவல் நிலையம் மழைநீரால் சூழப்பட்டது. திண்டுக்கல் நகர் சாலைகளில் எங்கு பார்த்தாலும் மழைநீர் ஆறாக ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தெப்பம் போல் தேங்கியது.

சில இடங்களில் மழைநீரு டன் கழிவுநீர் கலந்ததால், துர்நாற்றம் வீசியது. மழை நின்றதும், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, மேயர் இளமதி, ஆணையர் ரவிச்சந்திரன், துணை மேயர் ராஜப்பா ஆகியோர் நகரில் மழையால் பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்குச் சென்று ஆய்வு செய்தனர். மாநகராட்சி ஊழியர்கள் பொக்லைன் வாகனத்துடன் வலம் வந்து, சாக்கடையில் அடைப்பு ஏற்பட்ட பகுதிகளை சரி செய்து கழிவு நீரை வெளியேற்றினர்.

கரும்பு அறுவடை பாதிப்பு: திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள செட்டிநாயக்கன்பட்டி, நொச்சி ஓடைப்பட்டி, அதிகாரிப்பட்டி, சாணார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் கரும்பு சாகுபடி செய்யப்பட்டிருந்தது. இன்னும் சில தினங்களில் கரும்பு அறுவடை செய்ய தயார் நிலையில் இருந்தது. அதற்குள் கொட்டித் தீர்த்த மழையால் கரும்புகள் சாய்ந்து விழுந்தன. இதனால் ஓராண்டு உழைப்பு வீணாகியதை எண்ணி விவசாயிகள் கவலையடைந்துள் ளனர்.

திண்டுக்கல்லில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீட்டரில்): திண்டுக்கல்- 91.8 மி.மீ., பழநி- 93, ஒட்டன்சத்திரம்- 38.4, வேடசந்தூர்- 31, வேடசந்தூர் புகையிலை நிலையம்- 31.9, கொடைக்கானல் ரோஸ் கார்டன்- 26.4, கொடைக்கானல் போட் கிளப்- 28.4, நிலக்கோட்டை- 28.3, காமாட்சிபுரம்-17.4, நத்தம் – 4.5 மி.மீ. என மாவட்டம் முழுவதும் மொத்தம் 392.1 மி.மீ. மழை பெய்துள்ளது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *