செங்கல்பட்டு: செங்கல்பட்டில் பெய்து வரும் மழை காரணமாக நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உர செலவு வீணாகி விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் தற்போது கனமழை பரவலாக பெய்துவருகிறது. இந்நிலையில் செங்கல்பட்டு அடுத்த ஒத்திவாக்கம், ஒழலூர், பொன் விளைந்த களத்தூர், மணப்பாக்கம், உதயம்பாக்கம், ஆனூர், கோரப்பட்டு, பொன் பதர் கூடம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரகாலமாக விவசாயிகள் நெற்பயிர்களை நடவு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

சுமார் 5,000 ஏக்கரில்விவசாயிகள் இப்பணிகளை மேற்கொண்டனர். கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழையின் காரணமாக ஒழலூர், ஒத்திவாக்கம், பொன்விளைந்த களத்தூர், கோரப்பட்டு, சாலூர், உள்ளிட்ட ஏரிகள் முழுமையாக நீர் நிரம்பி இருந்தது. இந்நிலையில் விவசாயிகள் தற்போது நடவு பணியை தொடங்கி இருக்கும் வேளையில் கடந்த 2 தினங்களாக பெய்த கனமழை காரணமாக நடவு செய்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி தற்போது அழுகும் நிலை உருவாகியுள்ளது.

ஏக்கருக்கு ரூ. 20,000 வரை செலவு செய்துவிட்டதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். மேலும் விளைநிலங்களில் இருந்து நீர் வெளியேறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, கோ 51, குண்டு, பப்பட்லா,எல்.என்.ஆர். போன்ற பயிர் வகைகள் நன்கு வளர்ச்சி அடைந்துவரும் நிலையில் பயிருக்கு தேவையான மேலுரம் இட்டு பயிர்களை பாதுகாத்து வந்தோம்.

இந்நிலையில், மழை காரணமாக பயிர்களுக்கு தெளித்த மருந்துகள் மழையில் வீணாகி வீண் செலவாகிப்போனது. தற்போது வயல்களில் தேங்கியுள்ள மழை நீர்வடியாமல் உள்ளது. இதனால் பெரும் இழப்பு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மழை காலங்களில் விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்து நெற்பயிர்கள் மூழ்கி சேதமடைந்து வருகின்றன. இதற்கு தீர்வு காண, தேவையான வடிகால் வாய்க்கால்களை அரசு அமைக்க வேண்டும். இதுகுறித்து, பல முறை மனு கொடுத்தும், நேரில் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. ‘நிதி இல்லை’ என்று தட்டிக்கழிக்கின்றனர்.

முறையான வடிகால் வாய்க்கால் அமைக்கப்படாததால் எளிய முறையில் தீர்க்க வேண்டிய விஷயத்தை தீர்க்காமல், பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறோம். கடன் வாங்கி தான் விவசாயம் செய்கிறோம். அரசு உரிய தீர்வு காண வேண்டும். சேதமடைந்த பயிர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும்’’ என்று இப்பகுதி விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *