Loading

சென்னை: பெரம்பூரில் நீர் தேங்கியதற்கு பழைய மழைநீர் வடிகால்களை தூர்வாராததே காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். வடசென்னையின் பெரிய தொகுதி மற்றும் முக்கிய பகுதியாக பெரம்பூர் விளங்குகிறது. தொழில் நகரமாக இருந்து வரும் இப்பகுதியில் அனைத்து தரப்பு மக்களும் வசித்து வருகின்றனர். அதேநேரம், ரயில் நிலையம், பேருந்து நிலையம் என பெரம்பூருக்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், மற்றொரு புறம் மேம்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அண்மையில் மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த மழை சென்னையின் அனைத்து பகுதிகளிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதில், பெரம்பூர் பகுதி மக்களும் கடுமையான இன்னல்களை சந்தித்தனர். இதற்கு பழைய மழைநீர் வடிகாலை பராமரிக்காததே காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுதொடர்பாக பெரம்பூர் சுற்றுவட்டார மேம்பாட்டுக் குழுவின் அமைப்பாளர் ரகுகுமார் சூடாமணி கூறியதாவது: பெரம்பூர் நெடுஞ்சாலை, பி.பி.சாலை, மாதவரம் நெடுஞ்சாலை, குமாரசாமி தெரு உள்ளிட்ட முக்கிய சாலைகளின் உயரத்தை ஒன்றரை அடி உயர்த்தி விட்டனர். அதற்கேற்ப உள்புறத்தில் உள்ள சாலைகளின் உயரத்தை அதிகரிக்கவில்லை. இதனால் அங்கு தேங்கும் மழைநீர் வழிந்தோடி, வெங்கட்ராமன் தெரு, வாசன் தெரு, படேல் சாலை, நெல்வயல் தெரு, சீனிவாசன் தெரு, ராமகிருஷ்ணன் தெரு, சுப்ரமணியம் தெரு, நியூ காலனி 1, 2 பிரதான சாலைகள் போன்ற இடங்களில் தேங்கியது. இந்த தெருக்களில் படேல் தெரு, நெல்வயல் தெரு உள்ளிட்ட தெருக்களில் மழைநீர் வடிகால்கள் உள்ளன. இவையெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்னதாக அமைக்கப்பட்டவை.

இங்கு சரியான நேரத்தில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள பல முறை கோரிக்கை வைத்தோம். ஆனால்எந்த பணிகளும் நடைபெறவில்லை. குறிப்பாக படேல் சாலையில் உள்ள மழைநீர் வடிகாலில் தூர்வாரும் பணி என்ற பெயரில் குளறுபடி செய்து வைத்தனர். நெல்வயல் சாலை, வடிவேல் தெரு, பெரம்பூர் நெடுஞ்சாலை உள்ளிட்ட இடங்களில் இருக்கும் மழைநீர் வடிகால்கள் தற்போது மோசமான நிலையில் காணப்படுகின்றன. முன்னதாக, பெரம்பூர் பேருந்து நிலையம், வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் வழியாக செல்லும் வகையில் கால்வாய் இருந்தது. அதன் வழியாக ஓட்டேரி நல்லா கால்வாய்க்கு நீர் செல்லும். ஆனால் அந்த கால்வாய் முழுவதும் தற்போது கட்டிடக் கழிவுதான் மிஞ்சியிருக்கிறது.

இந்த கால்வாயுடன், மழைநீர் வடிகால் என இரண்டுமே பெரம்பூர் நெடுஞ்சாலையில் மிகவும் அகலமாக இருக்கும் நிலையில், கணேசபுரம் மேம்பாலம் அருகே குறுகும்படி செய்துவிட்டனர். இதனை அகலப்படுத்தினாலே தாராளமாக நீர் செல்ல வழிகிடைக்கும். ஜவஹர் நகர் பிரதான சாலையில் பகுதி பகுதியாக மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொண்டு, அப்படியே விட்டுவிட்டனர். அங்கெல்லாம் கடந்த ஆண்டைவிட அதிகமாக நீர் தேங்கி மோசமான நிலை காணப்பட்டது. பெரவள்ளூர் அருகே வண்ணான்குட்டை என்னும் நீர்நிலையை மீட்டெடுக்க வேண்டும். மக்களை பாதிக்கக் கூடியவற்றை முதலில் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். உட்கட்டைமப்பை வலுப்படுத்த வேண்டும். அதே நேரம், மக்களும் மழைநீர் வடிகால் வாகன மேல்சாய்தளம் அமைத்து ஆக்கிரமிப்பு செய்கின்றனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரகுகுமார் சூடாமணி

மேலும் இங்கிருக்கும் கழிவுநீர் உந்து நிலையத்தின் திறன் மிகவும் குறைவு. மழைநீரின் அளவு அதிகரிக்கும்போது, கழிவுநீர் பாதையிலும் சென்று பாதாள சாக்கடை குழிகள் வழியாக வெளியேறும். இது சுகாதார சீர்கேட்டுக்கு வழிவகுக்கிறது. எனவே, கழிவுநீரகற்று நிலையத்தின் திறனை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தாழ்வான பகுதிகளில் இருந்து குழாய் மூலம் மழைநீர் வடிகாலுக்குச் தண்ணீர் செல்லும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும். அமைக்கப்பட்ட கிணறுகளை தூர்வாரி தூய்மையாக பராமரிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: வடிவேல் தெரு, நெல்வயல் தெரு, பிபி சாலை உள்ளிட்ட இடங்களில் இருக்கும் பழைய மழைநீர் வடிகாலை சீரமைப்பது தொடர்பாக கோரிக்கை முன்வைத்துள்ளோம். ஒப்புதல் கிடைத்தவுடன் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் மூலம் பணிகளை மேற்கொள்வோம். படேல் சாலை போன்ற இடங்களில் இருந்து மழைநீர் சீரான முறையில் வெளியேறியது. ஒரு சில இடங்களில் அடைப்புகள் இருந்தது உண்மைதான். அதை சரி செய்யவும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். சாலைகளின் உயரத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தற்போதுதான் சாலைகளை சீரமைக்கும் பணியே தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *