“ஆனால் அந்த எதிர்ப்பைக் கூட உங்கள் தரப்பிடம் பார்க்க முடியவில்லையே?”
“ஓ.பி.எஸ்ஸை பொருத்தவரையில் யாரையும் தவறாகவோ, கண்ணியக்குறைவாகவோ பேசமாட்டார். அதனால் உங்களுக்கு அப்படித் தெரியலாம். யாராக இருந்தாலும் மதித்தால் மதிப்போம், மிதித்தால் மிதிப்போம் என்று நானே ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நாளை ஓ.பி.எஸ் இணைந்தால் கூட, தமிழ்நாட்டில் நாங்கள்தான் கூட்டணிக்கு தலைமை வகிக்க வேண்டுமென்பதே எங்கள் நிலைப்பாடு. எந்த விதத்திலும் எங்கள் உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம். அதனால் எங்கள் தலைமையை ஏற்கிற கட்சிகள் அவர்களாக வரட்டும்.”

“அ.தி.மு.க கட்சியையும் தொண்டர்களையும் தனது கட்டுப்பாட்டில் எடப்பாடி கொண்டுவந்துவிட்டார் என்பது உண்மைதானே?”
“எடப்பாடியோ, அவரின் அணியினரோ அப்படிச் சொன்னால் அது சுத்தமான பொய். சசிகலா, ஓ.பி.எஸ், பா.ஜ.க-வுக்கு துரோகம் செய்து ஏமாற்றியிருக்கிறார் எடப்பாடி. பொன்னையன் கூறியதுபோல பலர் எடப்பாடியை சுற்றியிருக்க பலரும் தங்களுக்கு கீழ் 10, 15 எம்.எல்.ஏ-க்களை வைத்துக்கொண்டு கொள்ளை அடித்திருக்கிறார்கள். அதனால் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் அவரோடுதான் இருப்பார்கள். அது நிலையாக நீடிக்காது. எம்ஜிஆர் உருவாக்கிய பைலாவை நாசம் செய்துவிட்டார்கள். பெரியார், அண்ணா படங்களைக் கூட மறந்துவிட்டார்கள். அதிமுகவை சிதைத்து சின்னாபின்னமாக்கிவிட்டார் எடப்பாடி. யாரோடு பேரம் பேசி இப்படி நடந்துகொள்கிறார் எனத் தெரியவில்லை. கோடிக்கணக்கான தொண்டர்கள் அவருக்கு பின்னால் இருப்பது உண்மைதான் என்றால் ஒரு தேர்தலில் கூட வெல்ல முடியாதது ஏன்?”