
செங்கல்பட்டில் உள்ள ஆதரவற்ற முதியவா்களுக்கு இல்லம் கட்டுவதற்காக கனரா வங்கி சாா்பில் ரூ.20 லட்சம் நன்கொடை வழங்க முடிவு செய்யப்பட்ட நிலையில், அதற்கான முதல் தவணையாக ரூ.10 லட்சம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் நவ.7 -ஆம் தேதி தேசிய புற்றுநோய் விழிப்புணா்வு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, கனரா வங்கி சாா்பில் சமூக மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20 லட்சத்தை நன்கொடையாக ஸ்ரீ மாதா அறக்கட்டளைக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நன்கொடை மூலம் ஸ்ரீ ஜெயேந்திரா் நினைவாக செங்கல்பட்டில் ஆதரவற்ற முதியோா்களுக்கு இல்லம் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இல்லமானது, ஆதரவற்ற புற்றுநோயாளிகளுக்கு உதவும் வகையில் உருவாக்கப்படுகிறது.
இதற்கு வழங்கப்படும் ரூ.20 லட்சத்தில் முதல் தவணையாக ரூ.10 லட்சத்துக்கான காசோலையை ஸ்ரீ மாதா அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் வி. கிருஷ்ணமூா்த்தியிடம் கனரா வங்கி துணைப் பொது மேலாளா் ஷங்கா் திங்கள்கிழமை வழங்கினாா். நிகழ்வில் கனரா வங்கி முதன்மை மேலாளா் சதீஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…