கடலுார்: கடலுார் மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க, கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
இது குறித்து கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பு:
டெல்டா மாவட்டமான கடலுார் மாவட்டத்தில், மோசமான வானிலை காரணமாக, கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், ஓரிரு இடங்களில் அதிக கனமழை பெய்யக்கூடும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக இடிமின்னலுடன் கனமழை பெய்யும்போது, பொதுமக்கள் திறந்தவெளியில் நிற்பதையும், நீர்நிலைகள் மற்றும் ஆற்றில் குளிக்க செல்வதை தவிர்க்க வேண்டும்.
தாழ்வான பகுதிகள் மற்றும் நீர்நிலைகளின் இரு கரை பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். கால்நடைகளை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும், மருந்து, விளக்கு போன்ற அத்தியாவசிய பொருட்களை தயாராக வைத்திருக்க வேண்டும்.
மீன்பிடிக்க தடை
கடலுார் மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது.
மேலும் கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் கால நடவடிக்கைகள் மேற்கொள்ள 24 மணி நேரமும், அவசரக்கால கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. மழை, வெள்ளம் மற்றும் பேரிடர்கள் குறித்து பொதுமக்கள் 1077, 04142 220700 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகாரின் மீது, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
