காதலித்த பெண்ணை கொலை செய்து புதைத்தவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்சவேலாம்பட்டியைச் சேர்ந்தவர் சசிகலா. இவர் கோதவாடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது, அங்கு வேலை பார்த்த மலுமிச்சம்பட்டியைச் சேர்ந்த வினோத் (38) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், சசிகலாவுக்கு அவரது உறவினர் ஒருவரை திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஏற்பாடு செய்தனர். பின்னர், வினோத்துடன் பேசுவதையும், பழகுவதையும் சசிகலா நிறுத்திவிட்டார்.

இந்நிலையில், கடந்த 2013 அக்டோபர் 24-ம் தேதி, சசிகலாவிடம் தனியாக பேச வேண்டும் என்று அவரை எல் அண்ட் டி பைபாஸ் சாலையில் தனியார் பல்கலைக்கழகத்துக்கு பின்புறம் வினோத் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சசிகலாவை கொலை செய்த வினோத், உடலை புதைத்துள்ளார். இதற்கிடையே தங்களது மகளை காணவில்லை என சசிகலாவின் பெற்றோர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டபோது, வினோத், சசிகலாவை கொலை செய்து புதைத்தது 2014 ஜனவரியில் தெரியவந்தது. புதைத்த இடத்தை தோண்டியபோது அங்கு எலும்புகள் மட்டுமே மிஞ்சியிருந்தன. கிடைத்த ஆதாரங்களை வைத்து டிஎன்ஏ பரிசோதனை மேற்கொண்டதில், அது சசிகலாவின் உடல் என்பது உறுதியானது. இதையடுத்து, போலீஸார் வினோத்தை கைது செய்தனர். பின்னர், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

கோவை மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில், 2015 நவம்பர் முதல் வழக்கில் ஆஜராகாமல் வினோத் தலைமறைவானார். இதையடுத்து, அவரை தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்தது. வினோத்தை பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸார், 2021 டிசம்பரில் திருப்பூரில் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி ஆர்.நந்தினிதேவி நேற்று தீர்ப்பளித்தார். அதில், வினோத்துக்கு ஆயுள் சிறை தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அரசு தரப்பில் வழக்கறிஞர் பி.ஜிஷா ஆஜரானார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *