இந்திய அணியின் வீரரும் டெல்லி அணியின் கேப்டனுமான ரிஷப் பண்ட்டுக்கு அவ்வணியின் பயிற்சியாளரான ரிக்கி பாண்டிங் அழைப்பு விடுத்துள்ளார்.

கார் விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், தற்போது மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால், இந்த ஆண்டு நடைபெறும் பல போட்டிகளில் அவர் பங்கேற்க வாய்ப்பில்லை என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் அவர் உடற்தகுதி பெற்றால், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற இருக்கும் ஒருநாள் உலகக்கோப்பையில் இடம்பெறவும் வாய்ப்புண்டு எனச் சொல்லப்படுகிறது.

ரிக்கி பாண்டிங் அழைப்பு

அதுபோல் வரும் மார்ச் – ஏப்ரல் மாதங்களில் நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரிலும் ரிஷப் பண்ட் பங்கேற்க மாட்டார் என அணி நிர்வாகம் ஏற்கெனவே தெரிவித்துள்ளது. அவர் டெல்லி அணியின் கேப்டனாகச் செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ‘ரிஷப் பண்ட்டின் சேவை, அணிக்குத் தேவை’ என டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

image

இதுகுறித்து அவர், “ரிஷப் பண்ட் விளையாடுவதற்கு உடற்தகுதியுடன் இல்லை என்றாலும், அவர் எங்கள் அணிக்கு தேவைப்படுகிறார். ஒரு கேப்டனாக அவரின் செயல்பாடுகள், கண்டிப்பாக டெல்லி அணிக்கு தேவை. எனவே ரிஷப் பண்ட் பயணம் மேற்கொள்ளும் அளவிற்கு தயாராகிவிட்டால் போதும். மார்ச் மாதம் தொடங்கப்படும் டெல்லி அணி பயிற்சி முகாமில் அனைத்து நாட்களிலும் ரிஷப் பண்ட் என்னுடன் பயணம் செய்ய விரும்புகிறேன். அவர் இருந்தாலே போதும்” எனத் தெரிவித்துள்ளார்.

விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட்

கடந்த ஆண்டு (2022) டிசம்பர் 30ஆம் தேதி உத்தரகாண்ட் மாநிலம் ரூர்கி அருகே சென்றபோது, அவரது கார் விபத்தில் சிக்கியது. இதில் படுகாயமடைந்த ரிஷ்ப் பண்ட்டை, அந்த வழியாகச் சென்ற பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் டேராடூன் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுவந்த அவர், மேல்சிகிச்சைக்காக மும்பைக்கு மாற்றப்பட்டார். மும்பையில் அவரது முழங்கால் மற்றும் கணுக்காலில் ஏற்பட்ட தசைநார் கிழிவுக்கு இரண்டு அறுவைச்சிகிச்சைகள் செய்யப்பட்டது.

image

நம்பிக்கையளித்த ரிக்கி பாண்டிங்

மூன்றாவது அறுவைச்சிகிச்சை இன்னும் 6 வாரத்தில் நடைபெறும் எனவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் 2 அறுவைச்சிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப்பட்டதை அடுத்து, ரிஷப் பண்ட், முதல்முறையாக அனைவருக்கும் நன்றி தெரிவித்திருந்தார். அத்துடன், ‘விரைவில் களத்தில் சந்திக்க விரும்புகிறேன்’ என்ற உறுதியான நம்பிக்கையையும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், ரிக்கி பாண்டிங் அவருக்கு அழைப்பு விடுத்திருப்பது, ரிஷ்ப்புக்கு மேலும் நம்பிக்கையை அளித்திருக்கிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *