மீண்டும் வாலாட்டும் பீட்டா! “ஓமிக்ரான் பரவுவதால் ஜல்லிக்கட்டுக்கு தடை போடுங்க” தமிழக அரசுக்கு கடிதம்.,

Estimated read time 0 min read

சென்னை:

ஓமிக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு அனுமதி வழங்க கூடாது என்று தமிழக அரசுக்கு பீட்டா அமைப்பு கடிதம் எழுதி உள்ளது. கொடிய தொற்று வைரஸ் நோயுடன் போராடும் நாட்டில் ஜல்லிக்கட்டு போன்ற அத்தியாவசியமற்ற நிகழ்வுகளுக்கு இடமில்லை என்று பீட்டா இந்தியா அமைப்பின் சிஇஓ மணிலால் வல்லியத்தே தெரிவித்துள்ளார்.

டெல்டா கொரோனா வைரஸ் பரவலைக் காட்டிலும் ஓமிக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவக்கூடியது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஓமிக்ரான் தொற்று பரவலை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு அன்று நள்ளிரவு சென்னையில் மெரினா உள்பட கடற்கரை பகுதிகளில் மக்கள் கூடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாட்டில் நடத்தப்படும் பாரம்பரியம் மிக்க ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று பீட்டா அமைப்பு வலியுறுத்தி உள்ளது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு

தமிழகத்தில் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய ஊர்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். சில ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

மெரீனா போராட்டம்

கடந்த 2017ஆம் ஆண்டு மாநிலம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த போராட்டங்கள் வெடித்தன. மெரீனா கடற்கரையில் லட்சக்கணக்கான இளைஞர்கள் கூடி போராடினர். அலங்காநல்லூர் வாடிவாசல் முன்பு மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. மதுரை, கோவையிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என்று இளைஞர்கள் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்தனர். இதன்காரணமாக தமிழக அரசு சார்பில் அவசர சட்டம் இயற்றப்பட்டு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

2017 முதல் உயிரிழப்பு

கடந்த 2017ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழக அரசு ஜல்லிக்கட்டுக்கு 2017ஆம் ஆண்டு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கியதில் இருந்து இதுவரை 22 காளைகள் மற்றும் 69 மனிதர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 4,696 பேர் காயமடைந்துள்ளதாகவும் பீட்டா அமைப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசுக்கு அந்த அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி மணிலால் வல்லியத்தே கடிதம் எழுதி உள்ளார்.

ஓமிக்ரான் பரவல்

தற்போது ஓமிக்ரான் பரவல் அச்சுறுத்தல் உள்ளது. கொடிய வைரஸ் தொற்றுடன் நாடே போராடி வரும் சூழ்நிலையில் ஜல்லிக்கட்டு போன்ற அத்தியாவசியமற்ற போட்டிகளுக்கு இடம் அளிக்க கூடாது. எனவே மருத்துவர்களின் தொழில்முறை கருத்துகளுக்கு செவிசாய்த்து, பொதுமக்களை ஆபத்தான நோயில் இருந்து காக்கவும், காளைகளை கொடுமைகளில் இருந்து காக்கவும் ஜல்லிக்கட்டு போட்டியை கைவிடவேண்டும் என்று கூறியுள்ளார்.

பொதுமக்களுக்கு பாதுகாப்பு

இந்த மருத்துவர்களின் தொழில்முறை கருத்துக்கு செவிசாய்த்து, காளைகளை கொடுமையிலிருந்தும், பொதுமக்களை உயிருக்கு ஆபத்தான நோயிலிருந்தும் காக்க ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை கைவிட வேண்டும் என பீட்டா இந்தியா அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

டாக்டர்கள் கடிதம்

கொரோனா வைரஸ் உருமாற்றம் பொதுமக்களுக்கு கடுமையான உடல்நல அபாயத்தை ஏற்படுத்த கூடும் என்பதால், ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி தரக்கூடாது என்று தமிழக மக்கள் மற்றும் மருத்துவ நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்துக்கு 80 டாக்டர்கள் வேண்டுகோள் விடுத்து கடிதம் அனுப்பி உள்ளனர்.

உடல் நல பாதிப்பு

மத்திய அரசு 2022ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி வரை சர்வதேச விமானங்களை முழுமையாக மீண்டும் தொடங்குவதை ஒத்திவைத்தது, எனவே. விளையாட்டை நடத்த அனுமதிப்பது பொது சுகாதார முன்னெச்சரிக்கைகளுக்கு முரணானது என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். கொரோனா வைரஸ் மற்றும் வளர்ந்து வரும் மாறுபாடு ஆகியவை பொதுமக்களுக்கு கடுமையான உடல்நல அபாயத்தை ஏற்படுத்தும், மேலும் ஒரு சூப்பர் பரவலாக மாறக்கூடும் என்று பீட்டா அமைப்பு தெரிவித்துள்ளது.

காளைகளுக்கு பாதிப்பு

ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்வுகளின் போது காளைகளுக்கு நடக்கும் மிகவும் கொடுமையான நிகழ்வுகளை பீட்டா இந்தியா ஆவணப்படுத்தியுள்ளது ஜல்லிக்கட்டின் போது, ​ பங்கேற்பாளர்கள் பயமுறுத்தும் காளைகளின் வாலைக் கடித்துக் கொண்டும், மூக்குக் கயிற்றைக் கடித்துக் கொண்டும், ஆயுதங்களால் தேய்த்தும் அரங்கிற்குள் காயப்படுத்துகிறார்கள் என்பதை விரிவான வீடியோ காட்சிகள் காட்டுகின்றன. இதனால் பீதியடைந்த காளைகள் மனிதர்கள் மீது மோதுகின்றன மற்றும் தடுப்புகளில் மோதி பெரும்பாலும் எலும்புகள் உடைகிறது அல்லது இறக்கின்றன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஓமிக்ரானை தடுக்க முடியும்

இந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ள டாக்டர்களில் ஒருவரான டாக்டர் தீப்ஷிகா சந்திரவன்ஷி கூறும்போது, மக்கள் அதிகமாக கூடும் ஜல்லிக்கட்டு போன்ற நிகழ்வுகளுக்கு தடை விதிக்க வேண்டும். இதன் மூலம் ஓமிக்ரான் பரவலை தடுக்க முடியும். பொது சுகாதாரத்தை பேணி காக்க முடியும். டாக்டர்கள் மீதான அழுத்தத்தை குறைப்பதற்கு உறுதுணையாக அமையும் என்று குறிப்பிட்டுள்ளார். ஓமிக்ரானை காரணம் காட்டி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த விடாமல் செய்ய நினைக்கிறது பீட்டா. தமிழக அரசு பீட்டாவின் சதியில் சிக்கக் கூடாது என்பது ஜல்லிக்கட்டு ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours