சேலம்;

புதிய கண்டுபிடிப்புகளுக்கு தேசிய அளவிலான இந்திய தொழில் கூட்டமைப்பின் விருதை, சேலம், தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி பெற்றுள்ளது.

கல்வி நிறுவனங்களில் புதிய கண்டுபிடிப்புகள், மதிநுட்பம் சார்ந்த தொழில்நுட்பங்கள்
ஆகியவற்றை ஊக்குவிக்கும் பொருட்டு, தேசிய அளவிலான உயரிய விருதை ஒவ்வோர்
ஆண்டும் இந்திய தொழில் கூட்டமைப்பு (சி. ஐ. ஐ. ) வழங்கி வருகிறது. அதன்படி, பாலிடெக்னிக் பிரிவில் 2021 ஆம் ஆண்டுக்கான சி. ஐ. ஐ. புதிய கண்டுபிடிப்புக்கான விருது, சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருதுக்கு மாணவர்கள், பேராசிரியர்களால் உருவாக்கப்பட்ட புதுமையான கண்டுபிடிப்புகள் விவரம்:

தியாகராஜர் பாலிடெக்னிக், இயந்திரவியல் துறை சார்பாக மின்சார இருசக்கர வாகனம்,
பல்பொருள் அங்காடியில் பொருள்களை எடுத்துச் செல்லும் நவீன வண்டி ஆகியவற்றின்
மாதிரி உருவாக்கப்பட்டது.

மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை சார்பில், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த விவசாயிகளுக்கு உகந்த பயிர் சாகுபடி வழிகாட்டு தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டது.

கட்டுமானவியல் துறை சார்பாக பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் வி. கார்த்திகேயன், பேராசிரியர் பொன்னி, மாணவர்கள் அத்திக் முகமது, தீபேஷ், அனுங் யங்போ ஆகியோரால்
இணைய வழி மெய்நிகர் (வி. ஆர். ) சைக்கிள் ரேஸ் விளையாட்டு உருவாக்கப்பட்டது. மேலும்,
கட்டுமானவியல் துறைத் தலைவர் எஸ். லோகநாதன், மாணவர்கள் விஸ்வநாதன், ராஜா, மோனிஷ், வர்ஷா, சல்மான், கார்த்திகா ஆகியோரால் கரும்புச் சக்கையில் இருந்து செங்கற்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

மேலும், இயந்திரவியல் துறை சார்பில், குறைந்த செலவில் மக்காச்சோளத்தை பிரித்தெடுக்கும்
இயந்திரம், உற்பத்திப் பொறியியல் துறை சார்பில் ஸ்மார்ட் உரத் தெளிப்பான், கணினித்
துறை சார்பில் இ-பஸ் பாஸ் ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய கண்டுபிடிப்புகளைப் பாராட்டி, இந்திய தொழில் கூட்டமைப்பு, பாலிடெக்னிக் பிரிவில் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரிக்கு சி. ஐ. ஐ. தொழில் துறை புதிய கண்டுபிடிப்பு விருது, தேசிய அளவிலான உயரிய விருதில் முதல் பரிசு ஆகியவற்றை வழங்கி உள்ளது.

தேசிய விருதுகளைப் பெற வழிகாட்டிய கல்லூரி முதல்வர் வி. கார்த்திகேயன், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்களுக்கு, கல்லூரித்தலைவர் சி. வள்ளியப்பா, துணைத் தலைவர் சொக்கு வள்ளியப்பா ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *