கல் குவாரிகளில் குறையொன்றும் இல்லை என, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறிஉள்ளார்.

அவரது அறிக்கை: கனிம வளத் துறையை, முதல்வராக இருந்த காலத்தில் மொத்தமாக ஒருவருக்கே குத்தகை விட்ட எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, இத்துறை குறித்து யார் வழியாகவோ தெரிந்து, அறிக்கை விட்டிருப்பதே பெரிய விஷயம் தான்.

கல் குவாரி நடத்துகிறவர்கள், ஆண்டுக்கு எவ்வளவு யூனிட் ஜல்லி உற்பத்தி செய்யப் போகிறோம் என்பதை, சுரங்க திட்டம் வழியாக, அரசுக்கு தெரிவித்த பின் தான், அவர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு மொத்தமாக, அந்த திட்டத்தில் குறிப்பிடப்பட்ட யூனிட்டுகளுக்கு, அரசுக்கு அவர்கள் பணம் செலுத்த வேண்டும்.

அந்த 12 மாதத்திற்குரிய யூனிட்டுகளை மொத்தமாக கணக்கிட்டு, அதற்குரிய தொகையை மாதாமாதம் செலுத்தி, ‘பர்மிட்’ பெறுவது வழக்கம். கல் குவாரி குத்தகைதாரர்களுடன், முந்தைய காலத்தில் ஏற்பட்ட தொடர்பின் காரணமாக, 12 மாத தொகையை முழுதும் கட்டிவிடக் கூடாது; அரசுக்கு வருவாய் வந்து விடக் கூடாது என்ற நல்லெண்ணத்துடன், ஒரு நொண்டி காரணத்தை சொல்லி இருக்கிறார்.

அ. தி. மு. க., ஆட்சியில், 15 நாட்கள் அல்லது மாதம் ஒரு முறை, ‘பர்மிட் வழங்குவது நடைமுறையில் இருந்தது. இதில், 15 நாட்களுக்கு வழங்கிய பர்மிட்டில், ஒரு குறிப்பிட்ட நாளுக்கான அனுமதியையே, 15 நாட்களுக்கும் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. அவ்வாறு ஒரே பர்மிட்டை வைத்து, பல முறை முறைகேடாக கனிமம் எடுத்து சென்ற வாகனங்களை, சமீபத்தில் இத்துறையின் இயக்குனர் கைப்பற்றி, குற்றவியல் நடவடிக்கை தொடரப்பட்டது.

மாதம் ஒரு முறை அல்லது 15 நாட்களுக்கு வழங்கப்பட்டு வந்த பர்மிட், தற்போது மூன்று நாட்களுக்கு ஒரு முறை என மாற்றப்பட்டு உள்ளதாக கூறும் தகவல் உண்மையல்ல

தற்போதைய நடைமுறை மாற்றம் என்னவென்றால், குத்தகைதாரர்களுக்கு வழங்கப்படும் மொத்த பர்மிட் எண்ணிக்கைக்கு ஏற்ப, மூன்று நாட்களுக்கு செல்லத்தக்க வகையில், பகுதி பகுதி யாக, 15 நாட்களுக்கு ஒரே முறையில் வழங்கப்படுகிறது.

எனவே, குத்தகைதாரர்கள் மூன்று நாட்களுக்கு ஒரு முறை, அலுவலகம் வந்து பர்மிட் பெற வேண்டும் என்ற அவசியம் ஏதுமில்லை. பழனிசாமி அவரது சுபாவத்திற்கு மாறுபட்டு, இந்த
அரசை விடியா அரசு, ஆளும் கட்சியை கவனித்து விட்டு, அரசுக்கு வர வேண்டிய வருவாய் எங்கே
போகிறது என்றெல்லாம் கடினமான சொற்களை பயன்படுத்தி உள்ளார்.

அவர் விரும்பினால் முந்தைய 10 ஆண்டுகளில், இந்த துறையின் கதைகளை விளக்க தயாராக இருக்கிறேன். மொட்டை பெட்டிஷன் மீது எல்லாம், அரசு முடிவு எடுத்திருக்கிறது என எதிர்க்கட்சி தலைவர் கூறி உள்ளார். மொட்டை பெட்டிஷனிலும் பெட்டி சமாசாரம் நிறையவே உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

-ஜீவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *