கடலூர்:

தீட்சிதர்களிடம் இருந்து சிதம்பரம் நடராஜர் கோவிலை மீட்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இயக்குநரும் தமிழ்ப்பேரரசு கட்சி பொதுச் செயலாளருமான கவுதமன் கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். தமிழ் சினிமாவில் “கனவே கலையாதே”, “மகிழ்ச்சி” ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் கவுதமன். இவர் சில தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கியுள்ளார். மேலும், தமிழ்ப்பேரரசு கட்சி என்ற கட்சியை நடத்தி வரும் கவுதமன், அக்கட்சியின் பொதுச்செயலாளராகவும் உள்ளார்.

ஆட்சியரிடம் மனு

சமீபத்தில் ஜெய் பீம் தொடர்பான சர்ச்சை எழுந்த போதும் கூட, நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என கவுதமன் வலியுறுத்தியிருந்தார். இந்தச் சூழலில் தமிழ்ப்பேரரசு கட்சியின் பொதுச்செயலாளரும், திரைப்பட இயக்குநருமான கவுதமன் சிவனடியார்களுடன் வந்து கடலூர் மாவட்ட நாச்சியார் பாலசுப்பிரமணியத்தை சந்தித்து மனு அளித்தார்.

தீண்டாமை

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, “சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வரும் பக்தர்களை அடித்து அவமானப்படுத்துவது மட்டுமின்றி, தங்களின் சொகுசு வாழ்க்கைக்காகக் கோயிலை சிதைத்து வரும் தீட்சிதர்களிடம் இருந்து தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் கோயிலை மீட்க வேண்டும். திருச்சிற்றம்பல மேடையில் சிவனடியார்களையும், பக்தர்களையும் அனுமதிக்காமல் தீண்டாமை நிலை திட்டமிட்டு தீட்சிதர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

மீட்டு தர வேண்டும்

ஆகம விதிகளை மீறி கோயிலை விடுதி போல் அலங்கரித்து ஒரு திருமணத்தை நடத்தி இருக்கிறார்கள். ஆனால் சாமி கும்பிட வரும் பக்தர்களை அவமானப்படுத்துகிறார்கள். ஆகவே சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசு மீட்காவிட்டால் தமிழ்ப்பேரரசு கட்சி போராட்டம் நடத்தும்” என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ 3 கோடி என்ன ஆனது

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “2009ஆம் ஆண்டில் இருந்து 5 ஆண்டுகள் இந்து சமய அறநிலையத்துறை வசம் இந்த கோயில் இருந்தபோதும் கூட வருமானமாகப் பெறப்பட்ட 3 கோடி ரூபாய் காணிக்கை என்ன ஆனது என்று தெரியவில்லை. கோயிலில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது. பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதால் கோயிலை அரசு கையகப்படுத்த வேண்டும். இல்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்” எனத் தெரிவித்தார் தீட்சிதர்களிடம் இருந்து சிதம்பரம் நடராஜர் கோயிலை மீட்க வேண்டும் என இயக்குநர் கவுதமன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளது சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *