சென்னை:
சென்னையில் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் புகுந்ததால் பெரும்பாலான கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. இதனால் கடந்த 4 நாட்களில் பல கோடி ரூபாய்க்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் கடந்த 4 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை பகுதிகளில் தாழ்வான மற்றும் பெரும்பாலான இடங்களில் வெள்ள நீர் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் சூழ்ந்துள்ளது. மக்கள் இயல்பான வாழ்க்கையை இழந்து தண்ணீரில் தங்களது குடும்பத்தினருடன் தவிர்த்து வருகின்றனர்.
அதேபோல், முக்கிய சாலைகளான பூந்தமல்லி நெடுஞ்சாலை, தி.நகர், பாண்டி பஜார், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், அரும்பாக்கம், கீழ்ப்பாக்கம், சூளைமேடு, வேளச்சேரி, பள்ளிக்கரணை, கோவிலம்பாக்கம், மேடவாக்கம், கீழ்கட்டளை, மாம்பாக்கம், ஆதம்பாக்கம், ஆலந்தூர், போரூர், சின்னமலை, தண்டையார் பேட்டை, வண்ணாரப்பேட்டை, ஓட்டேரி, வேப்பேரி, அண்ணாநகர், கோயம்பேடு, பெரம்பூர், வில்லிவாக்கம், புளியந்தோப்பு, ஐசிஎப் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. தேங்கிய நீரை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் இணைந்து போர்க்கால அடிப்படையில் வெளியேற்றி வருகின்றனர். இருந்தாலும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் தண்ணீர் வெளியேறாமல் கடல் போல் காட்சியளிக்கிறது.
இதனால் தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் உள்ள கடைகள், வர்த்தக நிறுவனங்கள் என பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. சில இடங்களில் நேற்று டீக்கடைகள், காய்கறி கடைகள் மட்டும் திறக்கப்பட்டது. மீதமுள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. பெரும்பாலான கடைகளில் ஒரு அடிக்கு மேல் தண்ணீர் உள்ளே புகுந்ததால் சிறு கடை வணிகர்களுக்கு பல கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் சாலையோரங்களில் மாநகராட்சி அனுமதியுடன் அமைக்கப்பட்ட கடைகள் மற்றும் நடைபாதை கடைகள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கியுள்ளது.
இதனால் சாலையோரங்களில் தள்ளுவண்டி கடைகள், சிறு கடைகள், நடைபாதை கடைகள் என சிறு வியாபாரிகள் கடை நடத்த முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர் மழையால் வியாபாரங்கள் இன்றி பிரதான சாலைகளான அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை சாலை, ஓஎம்ஆர், வடபழனி 100 அடி சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை என முக்கிய சாலைகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களாக பெய்து வரும் கனமழையால் சிறு வியாபாரிகள் முதல் பெரிய வியாபாரிகள் வரை பல நூறு கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்….
+ There are no comments
Add yours