சென்னை:

தலைநகர் சென்னையில் பலத்த மழை பெய்து வரும் நிலையிலும் சென்னை விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்படவில்லை. மேலும் பொதுமக்கள் குறைந்தது 3 மணி நேரம் முன்கூட்டியே விமான நிலையத்திற்கு வரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பரவலாகக் கனமழை பெய்து வருகிறது, இதனால் நகரின் பல முக்கிய ஏரிகள், குளங்கள் நிரம்பி வருகின்றன. குறிப்பாக, சென்னையில் கடந்த சனிக்கிழமை முதலே அதி தீவிர கனமழை பெய்து வருகிறது. சென்னை மட்டுமின்றி செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் என அனைத்து வடமாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம்

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று மாலை கரையைக் கடக்கிறது. புயலாக மாறாமல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையைக் கடப்பதால் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகத் தமிழ்நாட்டிற்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீஹரி கோட்டாவுக்கும், காரைக்காலுக்கும் இடையே இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விமானச் சேவை

சென்னை நகரிலும் சரி, புறநகரிலும் சரி பல்வேறு பகுதிகளிலும் நேற்று மாலை முதலே கனமழை பெய்து வருகிறது. சென்னை விமான நிலையம் அமைந்துள்ள மீனம்பாக்கம் பகுதியிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இருப்பினும், இந்த மழையால் விமானச் சேவை எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை என விமான நிலையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக இடி மின்னலுடன் கனமழை பெய்தால் மட்டுமே பாதுகாப்பு காரணங்களுக்காக விமானச் சேவை நிறுத்தப்படும்.

பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

தற்போது இடி மின்னல் பெரியளவில் இல்லை என்பதால் தற்போது வரை விமானச் சேவையில் எந்தவித பாதிப்பும் இல்லை. சென்னை விமான நிலையத்தில் அட்டவணைப்படியே விமானங்கள் இயக்கப்படுகிறது; கனமழை எச்சரிக்கை உள்ளதால் பயணிகள் குறைந்தபட்சம் 3 மணி நேரம் முன்கூட்டியே விமான நிலையத்துக்கு வந்து சிரமத்தைத் தவிர்க்குமாறு விமான நிலைய நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சர்வதேச விமானச் சேவை

சென்னை உள்நாட்டு விமான முனையத்தில் இருந்து 200க்கும் மேற்பட்ட விமானங்கள் எவ்வித தாமதமும் இல்லாமல் வழக்கம் போல இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு விமானங்கள் மட்டுமின்றி சர்வதேச முனையத்தில் இருந்தும் வெளிநாடு செல்லும் விமானங்கள் வழக்கம் போல நேர மாற்றமின்றி இயக்கப்படுகிறது. இதனால் பயணிகள் சரியான நேரத்திற்கு விமான நிலையம் வர வேண்டும் என்றும் அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ளவும் விமான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

உதவி எண்கள்

சென்னை மாநகராட்சியின் உதவிகளைப் பெற 1913 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். மேலும் 94454 77205, 94450 25818, 94450 25820, 94450 25821 என்ற எண்களில் வாட்ஸ்அப் செயலியிலும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல மழை வெள்ளத்தில் பாம்பு,தேள்,பூரான் போன்ற விஷ ஜந்துக்கள் வீட்டினுள் வந்தால் வனத்துறைக்கு 044 22200335 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். அதேபோல மின் சேவை குறித்த புகார்களை மின் நுகர்வோர் சேவை மையமான 98987 94987 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொண்டு அளிக்கலாம். திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்படப் பகுதிகளில் மழை மற்றும் வெள்ளம் சார்ந்த புகார்களை 044 27666746, 1077, 044 27664177 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *