பெரம்பூர்:
வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. சென்னையில் கடந்த 5 நாட்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழைகொட்டியது. இதனால் சாலைகளில் தண்ணீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல்வேறு பகுதிகளில் மரங்கள் விழுந்து சாலைகளில் கிடக்கிறது. குறிப்பாக, வடசென்னைக்கு உட்பட்ட வியாசர்பாடி, புளியந்தோப்பு, பெரம்பூர், கொடுங்கையூர், கொளத்தூர், திருவிக நகர், உள்ளிட்ட பல பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் வெள்ளம்போல் சூழ்ந்துள்ளது. கடந்த 4 நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக வியாசர்பாடி முல்லை நகர் மேம்பாலம், ஜீவாநகர் கணேசபுரம் மேம்பாலம் உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு தொடர்ந்து தண்ணீரை அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு பெய்த கனமழையால் மீண்டும் அப்பகுதிகளில் 5 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும் புளியந்தோப்பு கன்னிகாபுரம், பட்டாளம், தட்டாங்குளம், கே.பி.பார்க், சூளை அங்காளம்மன் கோயில் தெரு, ஸ்டாரன்ஸ் ரோடு, பி.பி.ரோடு, அம்பேத்கர் கல்லூரி சாலை, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, ஜமாலியா, ஏகாந்திபுரம், குமரன் நகர், ஜவகர் நகர் 1வது தெரு முதல் 6வது தெரு வரை, ஜி.கே.எம்.காலனி, சிவஇளங்கோ சாலை பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மழையின் காரணமாக இந்த பகுதிகளில் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் தண்ணீரை வெளியேற்றுவதில் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் தீயணைப்புத்துறை வீரர்களுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தண்ணீர் அதிகம் சூழ்ந்த இடங்களில் மாநகராட்சி அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் பொதுமக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றனர்.
தண்டையார்பேட்டை:
வடசென்னை பகுதிகளான வண்ணாரப்பேட்டை காவலர் குடியிருப்பு, காட்பாடா, போஜராஜன் நகர், பென்சில் பேக்டரி, வீரா குட்டி தெரு, பார்த்தசாரதி தெரு, மூலக்கொத்தளம் சி.பி.சாலை, ராயபுரம் காவலர் குடியிருப்பு, மேற்கு மாதா கோவில் தெரு, மன்னார்சாமி கோவில் தெரு, எஸ்.என்.செட்டி தெரு, ஷேக் மேஸ்திரி தெரு, அமராஞ்சிபுரம், காசிமேடு, ஜீவரத்தினம் சாலை, பவர் குப்பம், சிஜி காலனி, தண்டையார் நகர், கொருக்குப்பேட்டை, அம்பேத்கர் நகர், அனந்தநாயகி நகர், ஹரி நாராயணபுரம், பாரதி நகர், ஜெ.ஜெ.நகர், சுண்ணாம்பு கால்வாய், அண்ணா நகர், கருமாரியம்மன் நகர், கார்னேசன் நகர், தண்டையார்பேட்டை திலகர் நகர் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு, கைலாசம் தெரு, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, காவலர் குடியிருப்பு, கருமாரியம்மன் கோவில் தெரு, பட்டேல் நகர், தமிழன் நகர், வினோபா நகர், நேதாஜி நகர், கருணாநிதி நகர், எண்ணூர் நெடுஞ்சாலை, நேரு நகர், புதுவண்ணாரப்பேட்டை வஉசி நகர், அம்மணி அம்மன் தோட்டம், காவலர் குடியிருப்பு, அரசு அச்சக குடியிருப்பு, செரியன் நகர், லட்சுமி அம்மன் கோவில் சாலை, பூண்டி தங்கம்மாள் தெரு, குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் குளம்போல் மழைநீர் தேங்கியுள்ளது.
ஒரு சில பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலையுள்ளது. வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளதால் வீடுகளைவிட்டு வெளியில் வரமுடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். ஒரு சிலர் உறவினர் வீடுகளிலும் மாநகராட்சி பள்ளிகளிலும் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களுக்கு மாநகராட்சி, காவல்துறை, தொண்டு நிறுவனங்கள் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது. எனவே, சாலைகள், வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை அப்புறப்படுத்தி பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுபோல் துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட சென்ட்ரல் வால்டாக்ஸ் சாலை, கல்யாணபுரம் உட்வார்பு பகுதி, கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்பு, ஏழுகிணறு, தங்கசாலை, மண்ணடி, கொத்தவால் சாவடி, பூக்கடை பிரகாசம் சாலை, அன்னை சத்யா நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்….
+ There are no comments
Add yours