எங்களை கண்ணீர் சிந்த வைத்த முதியோர் இல்லங்கள்.!

Estimated read time 1 min read

கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரானாவை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது தொடங்கி, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு தொழிலாளர் குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கி வந்தோம்.
மனித நேயர்கள் ஞானபிரகாஷ், மணி முருகன் முதலானோர் உதவியுடன் ஏராளமான முதியோர் காப்பகங்களுக்கு சென்று அன்னதானம் வழங்கினோம்.

இப்பணியில் ஈடுபட என்னுடன் அருமை நண்பர் கோவிந்தராஜ், மனிதநேயர் பாலசுப்பிரமணியம்
உடன் வந்தனர்.

முதியோர் இல்லங்களுக்கு சென்ற போதெல்லாம் அவர்களுடன் அமர்ந்து உணவு உண்டு, அங்கு நீண்ட நேரம் செலவிட்டு உரையாடிவிட்டு தான் திரும்புவோம். அந்த சமயத்தில் அவர்களில் பலர் தாங்கள் பிறந்து வளர்ந்தது தொடங்கி முதியோர் இல்லத்திற்கு வந்ததுவரை அனைத்து விவரங்களையும் கூறி மனம் விட்டுப் பேசுவார்கள். மனதில் சுமந்து கொண்டிருந்த பாரத்தை இறக்கி வைத்த உணர்வை அவர்களிடம் பார்க்க முடியும்.

உணவு கொடுப்பதோடு நின்றுவிடாமல் அவர்களிடம் இருக்கும் மனப் புண்ணை ஆற்றுவதற்காக இப்படி நேரத்தை அங்கு செலவிடுவது எங்கள் வழக்கம்.

நாங்கள் பார்த்த வரைக்கும் ஆதரவற்ற முதியோர் இல்லங்களில் உள்ள பெரும்பாலானோருக்கு மகன் அல்லது மகள் உள்ளனர்.

இவர்களிடம் இருந்த பணம் தீரும் வரை அல்லது இவர்கள் பெயரில் இருந்த சொத்துக்களை எழுதி வாங்கும் வரை உடன் வைத்திருந்து விட்டு இனி ஒன்றுமில்லை என்று முடிவான பிறகு முதியோர் இல்லத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

பணி ஓய்வுக்குப் பிறகு கிடைத்த பெருந்தொகையை பெற்ற பிள்ளைகளிடம் கொடுத்து விட்டு வெறுங்கையோடு முதியோர் இல்லத்திற்கு வந்து சேர்ந்த பலரை பார்த்தேன்.

மருமகள் தொல்லை தாங்க முடியாமல் காப்பதற்கு வந்ததாக சொன்னவர்கள் நிறைய பேர்.

பத்து மாதம் சுமந்து பெற்று, தான் சாப்பிடாமல் , தன் பிள்ளைகளுக்காக உழைத்து, படிக்க வைத்தவர்களுக்கு ஏன் இந்த நிலைமை? என்று’ பல நாட்கள் யோசித்துள்ளேன்.

ஏராளமான முதியோர் இல்லங்களுக்குச் சென்று, பல நூறு முதியோர்களை பார்த்தவன் என்ற முறையில், என் அனுபவத்தின் அடிப்படையில் சொல்கிறேன்:

” முதியோர் இல்லங்களைப் பெருக விடாமல் தடுப்பதில் பெண்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. பெண்களால்தான் முடியும் என்று கூட சொல்வேன்.”

மருமகளாக புகுந்த வீட்டுக்கு செல்லும் இளம்பெண்களில் சிலர் மட்டுமே மாமியாரை தாய்போல கவனித்துக் கொள்கிறார்கள்.

தான் மாமியார் ஆகும் காலத்தில், தான் எப்படி நடத்தப்பட வேண்டும் என்று எண்ணிப் பார்த்து செயல்பட்டால் முதியோர் இல்லங்களுக்கு அவசியம் இருக்காது.

பெற்றோரை கைவிடும் பிள்ளைகளை தண்டிக்க சட்டம் உள்ளது. வயதான பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடியும்.

மிகப் பெரும் சமூகப் பிரச்சினையான இதை வெறும் சட்டத்தைப் போட்டு சரிசெய்ய முடியும் என்ற நம்பிக்கை எங்களைப் போன்றோருக்கு இல்லை. மனித மனங்கள் முதிர்ச்சி பெற்று செயல்படுவதன் மூலமே இப்பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

வீட்டில் நடைபெறும் பிறந்தநாள் ,திருமண நாளின் போது அருகில் உள்ள முதியோர் இல்லங்களுக்கு குழந்தைகளுடன் சேர்ந்து அவர்களுக்கு உணவுக்கு உணவு வழங்கி இந்நாளை கொண்டாடப் பழகுங்கள். இப்பழக்கம் பிஞ்சு உள்ளங்களில் நல்ல பண்புகளை வளர்க்கும். அந்தப் பண்புகள் வயதானவர்களை மதித்துப் போற்றி பாதுகாக்கும்.

“வருங்காலத்தில் முதியோர் இல்லம் நம் சமுதாயத்தில் உருவாகக் கூடாது”என்ற எங்கள் ஆதங்கமும் கண்ணீரும் தான் இங்கு பதிவாக மாறியுள்ளது.

இயற்கையாலும் இறைசக்தியாலும் நம் சமூகத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்று நம்புகிறோம்.
-புரசை வெங்கடேசன்
உதவும் கைகள்
9840914739
07.11.21

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours