சென்னை: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கொரோனாவால் உயிரிழந்த 36,200 குடும்பங்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணம் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்றை பேரிடராக அறிவித்து 500 நாட்களுக்கு மேல் கடந்துவிட்ட நிலையில், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு விதிகளின்படி உரிய இழப்பீட்டை வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜயகோபால் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது உச்சநீதிமன்ற உத்தரவின்படி, இழப்பீடு வழங்குவது தொடர்பாக வகுக்கப்பட்ட விதிகளின்படி, இழப்பீடு வழங்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. அச்சமயம் குறுக்கிட்ட நீதிபதிகள், மாநில அரசு எவ்வளவு இழப்பீடு வழங்கவுள்ளது என கேள்வி எழுப்பினர். இதற்கு தமிழக அரசின் தலைமை வழங்கறிஞர், உச்சநீதிமன்றத்தில் 50,000 ரூபாய் இழப்பீடு வழங்குவது என பல மாநிலங்கள் ஏற்றுக்கொண்டதாகவும், தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பில் 36,220 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும், அவர்களுக்கு தலா 50,000 ரூபாய் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதையடுத்து 50,000 ரூபாய் இழப்பீட்டை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக மற்றும் புதுச்சேரி அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் பிற மாநிலங்களில் கூடுதல் இழப்பீடு வழங்கியிருப்பதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், கூடுதலாக இழப்பீடு வழங்க எந்த தடையும் இல்லை எனவும் கூடுதலாக எவ்வளவு வழங்குவது என்பது குறித்து அடுத்த வாரம் கருத்து தெரிவிக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு இது தொடர்பான வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.
…
+ There are no comments
Add yours