தோபிகாட்… 2011-ல் ஆமிர் கான் தயாரித்து நடித்த படம். அவரின் முன்னாள் மனைவி கிரண் ராவ் இயக்கத்தில் வந்த முக்கியமான படம்.

மாற்று சினிமாவாக வந்து விமர்சன ரீதியாகவும் வியாபார ரீதியாகவும் ‘தோபிகாட்’  படம் சர்வதேச கவனத்தைக் குவித்தது. உலகப் புகழ்பெற்ற அர்ஜெண்டினா இசையமைப்பாளர் குஸ்டாவோ சான்டோலல்லா அந்தப் படத்துக்கு இசையமைத்திருந்தார். கிரண், அடுத்து என்ன மாதிரியான படம் இயக்கப்போகிறார் என்று பாலிவுட்டே ஆர்வமாகக் காத்திருந்தது. ஆனாலும், அவரது இரண்டாவது படைப்பான ‘லாபத்தா லேடீஸை’ எடுக்க 12 வருடங்கள் ஆகிவிட்டன. அண்மையில் தியேட்டரில் ரிலீஸாகி, நெட்ஃப்ளிக்ஸிலும் வெளிவந்திருக்கும் ‘லாபத்தா லேடீஸ்’ (தொலைந்த பெண்கள்) பலரின் கவனத்தையும் வரவேற்பையும் பெற்றிருக்கிறது.    

Laapataa Ladies

கதை ரொம்பவே எளிமையானது. ஆனால், ஒரு சின்னச் சிக்கலை வைத்து சமூகத்தில் புரையோடிப்போயிருக்கும் பல்வேறு மூடாக்குகளையும் ஒரே நேரத்தில் விமர்சிக்கிறது. தும்மல் வரவைக்கும் பிரசார நெடியோ, ரொம்பவே காரசாரமான விவாதங்களையோ எழுப்பாமல் மெல்லிய ஓடையாய் வசீகரிப்பதுதான் இந்தப் படத்தின் சிறப்பு. 

அப்படி என்னதான் கதை..?

நிர்மல் பிரதேசம் என்று அழைக்கப்படும் வட இந்தியாவின் கற்பனை மாநிலம் ஒன்றில் மிகவும் பின் தங்கிய ஒரு கிராமத்திலிருந்து ஃபூல் குமாரி என்ற திருமணமான இளம்பெண் தன் கணவர் தீபக்குடன் ரயிலில் பயணிக்கிறார். அதே ரயிலில் மற்றொரு புதுமணத் தம்பதியான பிரதீப்பும் அவனது இளம் மனைவியான ஜெயாவும் பயணிக்கிறார்கள். ஒரே கம்பார்ட்மெண்ட்டில் மணப்பெண்கள் இருவரும் ஒரே வண்ண ஆடையுடன் முகங்களை முந்தானையால் மூடிக் கொண்டு பயணிப்பதால் ஒரு குழப்பம் ஏற்படுகிறது. தீபக், நள்ளிரவில் தூக்கத்திலிருந்து எழுந்து தன் ஊரைத் தாண்டி ரயில் சென்று கொண்டிருப்பதை உணர்கிறான். தவறுதலாக தன் மனைவி ஃபூல் குமாரிக்குப் பதில் பிரதீப்பின் மனைவி ஜெயாவை எழுப்பிக் கையைப்பிடித்துக் கொண்டு ரயில் கிளம்பும் முன் கீழே இறங்கி விடுகிறான்.

Laapataa Ladies

தன் கிராமத்துக்கு அழைத்து வந்தபிறகுதான் தன்னுடன் வந்தது வேறொரு பெண் என்ற உண்மை அவனுக்கே தெரிகிறது. தன் மனைவி ஃபூல் குமாரியைக் கண்டுபிடித்துத் தரச் சொல்லி உள்ளூர் போலீஸில் புகாரளிக்கிறான் தீபக். பிரதீப்புக்கும் ஃபூல் குமாரிக்கும் தாமதமாக இந்த விஷயம் தெரிய வருகிறது. பிரதீப்பின் அழைப்பை நிராகரித்துவிட்டு ஃபூல் குமாரி தான் இறங்கிய ரயில் நிலையத்திலேயே தங்கி விடுகிறாள். தன் கணவனின் வருகைக்காக பதினாறு வயதினிலே மயில் போல அந்தக் கிராமத்து ரயில்வே ஸ்டேஷனில் காத்திருக்கிறாள்.

இன்னொரு பக்கம் தன் அடையாளத்தை மறைத்து மர்மமாக தீபக் வீட்டிலேயே இருக்கிறாள் ஜெயா. மணப்பெண்கள் மாறியது தெரிந்த பிறகும் ஜெயா, ஏன் தீபக் வீட்டிலேயே இருக்கிறாள், அவள் மறைத்து வைத்திருக்கும் ரகசியம் என்ன, சந்தர்ப்ப சூழலால் இடம்மாறிய பெண்கள் மீண்டும் தத்தம் கணவனைக் கண்டடைந்தார்களா என்பதே கதை.

படத்தின் ஆகப்பெரும் ப்ளஸ் இந்த எளிமையான கதையும், புத்திசாலித்தனத்தைக் கோராத எளிமையான வசனங்களும்தான். சின்னச் சின்ன கேரக்டர்கள் எழுதப்பட்ட விதம் அருமை. இரண்டு பெண்களின் ஏக்கங்கள், கனவுகள் பற்றி பாசாங்கில்லாமல் சொன்னதோடு, போலீஸ் இன்ஸ்பெக்டர், ஸ்டேஷன் மாஸ்டர், உதவி செய்யும் டீக்கடைப் பெண்மணி, டீக்கடையில் இருக்கும் குட்டிப் பையன், தீபக் வீட்டிலிருக்கும் இளம் தாய் என பாத்திரங்கள் ஒவ்வொன்றும் அழகாக எழுதப்பட்டிருக்கின்றன. சமூகத்தைப் பிரதிபலிக்கும் விதமாக கணவன்மார் கேரக்டர்களில் ஒருவர் ஆணாதிக்கவாதியாகவும், இன்னொருவர் மனைவியை நேசிக்கும் நபராகவும் கட்டப்பட்டிருப்பதும் அழகு.

Laapataa Ladies

“இப்போ என்னை என் கணவர் ஏத்துக்குவாரானு தெரியலை!”

“அடப்பெண்ணே… உன்னைத் தொலைச்சிட்டு போனவன் அவன். நீதான் அவனை ஏத்துக்கலாமா வேணாமானு முடிவு பண்ணணும்!”

“தனியா வாழ்றது கஷ்டமா இல்லையா பாட்டி?”

“தனியா உன்னை நீயே சந்தோஷமா பார்த்துக்கிறது ஆரம்பத்துல கஷ்டம்தான். ஆனா, அப்படி வாழப் பழகிட்டா யாரும் உனக்குத் தேவைப்படாது!”

“நம்மை நேசிக்கிறவனுக்குத்தான் நாம அடிக்கிற உரிமையையும் கொடுத்துடுறோம்!”

“முதல்ல புருஷன் பேரைச் சொல்லப் பழகு. அதுதான் முக்கியமான விஷயம்!”

– இப்படிப் படமெங்கிலும் எளிமையான, அதே சமயத்தில் வீரியமான வசனங்கள் நம்மை ஆச்சர்யமூட்டுகின்றன. சில காட்சிகள் அதிக வசனமே இல்லாமல் நம்மை ‘அட’ போடவைக்கின்றன. உதாரணமாக, முகத்தை மூடிய போட்டோவைக் காட்டி தன் மனைவியை சந்தையில் தேடும் தீபக்கிடம், `முகம்தான் அடையாளம்’ என்று சொல்லி கிண்டலடிக்கிறான் கடைக்காரன். அவன் மனைவி பர்தாவால் முகத்தை மறைத்துக் கொண்டு அவன் பின்னால் வந்து நிற்கும் காட்சி சுளீர் ரகம்.

‘என் வாழ்க்கையில நல்லது எதுவும் நடந்தாதானே இனிப்பு சாப்பிடுறதுக்கு’ என்று சொல்லும் மஞ்சுமாய், க்ளைமாக்ஸில் இனிப்பை அள்ளிச் சாப்பிடும் காட்சி, கவிதை!

இந்தி சினிமா, போஜ்பூரி சினிமா படங்களில் தனக்கென ஓர் இடத்தை வைத்திருக்கும் ரவி கிஷன், இன்ஸ்பெக்டர் ஷியாம் மனோகர் பாத்திரத்தில் பிரமாதப்படுத்துகிறார். வாயில் பீடாவைக் குதப்பிக் கொண்டே அவர் கடைசிக் காட்சியில் யதார்த்தமாகப் பேசுமிடம் கைதட்ட வைக்கிறது. ஃபூல் குமாரியாக நிதான்ஷி கோயல், ஜெயாவாக பிரதீபா ரன்டா, தீபக் குமாராக ஸ்பார்ஷ் ஶ்ரீவத்சவ், டீக்கடை நடத்தும் மஞ்சுமாயாக ஃபான்றி, ‘அந்தாதூன்’ உள்ளிட்ட படங்களில் நடித்த சாயா கடம் எனப் பிரதான பாத்திரங்களில் நடித்தவர்கள் எல்லோரும் அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். 

படத்தில் மைனஸ் எதுவுமே இல்லையா, என்ற கேள்விக்கு… நிச்சயமாக மெதுவாக நகரும் ஆரம்பக் காட்சிகளைச் சொல்லலாம். ஊர் பெயரைக்கூட மறந்துவிடும் அளவுக்கு இன்றைய கிராமத்து இளம் பெண் இருப்பாளா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. ஆனாலும், வடமாநிலங்களில் ஆணாதிக்கத்தால் தங்களின் சுய அடையாளம், விருப்புவெறுப்புகள் மறுக்கப்பட்டு இன்றும் ஒடுக்கப்பட்ட சமூகமாக வாழும் பெண்களின் துயரத்தின் சாட்சியாக இந்த பாத்திரங்களைச் சொல்லலாம். அதனால் இந்தக் குறையை மறந்துவிடலாம்.

Laapataa Ladies

கடைசி அரைமணி நேரத்தில் எந்தக் குறையும் தெரியாத அளவுக்கு விறுவிறுப்பாக்கி படத்தை எமோஷனலாக முடித்திருப்பதில் தெரிகிறது இயக்குநர் கிரண் ராவின் சாமர்த்தியம். 

2010-ல் இதேபோல அரசியல் ரீதியாகப் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணிய கிராமத்து சினிமா ‘பீப்லி லைவ்’ படத்தைத் தயாரித்ததைப்போல இந்தப் படத்தையும் தயாரித்து பாலிவுட்டில் தன் இருப்பையும் சமூகப் பொறுப்பையும் ஒரே நேரத்தில் பதிவு செய்திருக்கிறார் ஆமிர் கான். 

ஒரு மென்மையான படம், அது பேசும் அரசியல், பெண்ணிய அதிர்வலையை நிச்சயம் நாம் கொண்டாடித்தான் ஆக வேண்டும். க்ளைமாக்ஸ் முடிந்து கழுகுப் பார்வை காட்சி விரியும்போது `தொலைந்த பெண்கள்’ நம் மனதை ஆட்கொண்டு விடுகிறார்கள்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *