கேளம்பாக்கம்: முன்னாள் டி.ஜி.பி.யான ராஜேஷ்தாஸ் கேளம்பாக்கம் அருகே தையூரில் 2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தனது பண்ணை வீட்டில் எப்போதும் தங்குவது வழக்கம். இந்த வீடு மற்றும் நிலம் ஆகியவை ராஜேஷ்தாஸ் மனைவியும் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான பீலாவெங்கடேசன் பெயரில் வாங்கப்பட்டு உள்ளது.

மேலும் இருவரின் பெயரில் வங்கிக்கடனும் பெறப்பட்டுள்ளது. இதனிடையே ராஜேஷ்தாஸ் பெண் எஸ்.பி. ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்றார். ஆனால் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல் தவிர்த்து வந்தார்.

இதன் காரணமாக கடந்த 3 மாதங்களாக தையூர் பண்ணை வீட்டுக்கு அவர் வரவில்லை. வீட்டில் நேபாளத்தைச் சேர்ந்த காவலாளி நர் பகதூர், தையூரைச் சேர்ந்த தோட்ட பராமரிப்பாளர் மேகலா ஆகியோர் மட்டும் பணியில் இருந்தனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் பாலியல் வழக்கில் சரணடைவதில் இருந்து ராஜேஷ்தாஸ் விலக்கு பெற்றார். இதைத் தொடர்ந்து கடந்த 18-ம் தேதி தையூர்பண்ணை வீட்டுக்கு வந்த ராஜேஷ்தாஸ் வீட்டுக்குள் நுழைய முயன்றதாக தெரிகிறது. அப்போது பணியில் இருந்த காவலாளி நர் பகதூர்கேட்டை உள் பக்கமாக தாழ்ப்பாள் போட்டு பீலா இந்த வீட்டில் யாரையும் விட வேண்டாம் என்று கூறி உள்ளதாக கூறினார்.

இதையடுத்து செல்போன் மூலம் ஆட்களை வரவழைத்த ராஜேஷ்தாஸ் காவலாளியை அடித்து துரத்தி விட்டு அந்த வீட்டில் தங்கி உள்ளார். அவருக்கு பாதுகாப்பாக 10-க்கும் மேற்பட்ட அடியாட்கள் அந்த வீட்டில் தங்கி உள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஆன்லைன் மூலம் பீலா வெங்கடேசன் மின்வாரிய நிர்வாகத்திடம் மின் இணைப்பை தற்காலிகமாக துண்டித்து வைக்குமாறு கூறி இருந்தார். இதையடுத்து கேளம்பாக்கம் மின் வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்தனர்.

இதனிடையே நேற்று ஆன்லைன் மூலம் பீலா கேளம்பாக்கம் காவல் நிலையத்துக்கு புகார் ஒன்றை அனுப்பினார். தனது முன்னாள் கணவர் ராஜேஷ்தாஸ், அடையாளம் தெரியாத 10 நபர்கள் தனக்கு சொந்தமான தையூர் வீட்டின் உள்ளே அத்து மீறி நுழைந்து காவலாளியை தாக்கி செல்போனை பறித்து விட்டு உள்ளே தங்கி இருப்பதாகவும், அவர்களை வெளியேற்ற வேண்டும் என்றும் அந்த புகாரில் கூறி இருந்தார். இதையடுத்து கேளம்பாக்கம் போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் ராஜேஷ்தாஸ் மற்றும் 10 நபர்களின் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *