மதுரை: கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கரை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மதுரை சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

சவுக்கு மீடியா நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி சவுக்கு சங்கர். காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் இவரை கோவை போலீஸார் மே 5-ம் தேதி, தேனியில் வைத்து கைது செய்தனர். தேனியில் சவுக்கு சங்கர் கைதானபோது அவரது காரில் சோதனையிட்ட பழனிசெட்டிபட்டி போலீஸார் காரில் கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து, சங்கருடன் தேனி விடுதியில் தங்கியிருந்த ராஜரத்தினம், அவரது ஓட்டுநர் ராம்பிரபு ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர். கஞ்சா வழக்குக்காக சவுக்கு சங்கரையும் பழனிசெட்டிபட்டி போலீஸார் கைது செய்தனர்.

கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கர் மதுரை போதை பொருள் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் சவுக்கு சங்கரை 7 நாள் போலீஸில் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போதைப் பொருள் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் போலீஸார் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி செங்கமலச்செல்வன் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சவுக்கு சங்கரை போலீஸார் ஆஜர்படுத்தினர்.

பின்னர், சவுக்கு சங்கரை 2 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கலாம். விசாரணை முடிந்து, புதன்கிழமை மாலை 3 மணிக்கு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். போலீஸ் விசாரணையின் போது சவுக்கு சங்கரை காலை 8, மதியம் 2, இரவு 7 மணிக்கு வழக்கறிஞர் சந்தித்து பேசலாம் என நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, சவுக்கு சங்கரை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

முன்னதாக, சவுக்கு சங்கரை மதியம் 12 மணியளவில் போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கஞ்சா வழக்கில் ஜாமீன் கோரி சவுக்கு சங்கர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை மே 22-க்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *