மதுரை: மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் கீழ் தளத்தில் உள்ள பார்வையற்றோர் பிரிவு மற்றும் கலைக்கூடத்தில் மழைநீர் புகுந்தது. இதனால், தரைத்தளத்தில் உள்ள இரண்டு நூலகப் பிரிவுகள், வாசகர்கள் பயன்படுத்தாமல் இருக்க தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தைப் போல் மதுரையில் நத்தம் சாலையில் ரூ.215 கோடியில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இந்த நூலகத்தை கடந்த 2023 -ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.60 கோடிக்கு புத்தகங்கள், ரூ.18 கோடிக்கு தளவாடப் பொருட்கள் இந்த நூலகத்தில் உள்ளன. புத்தகங்களை அடுக்கி வைக்கத் தேவையான ரேக்குகள் மற்றும் கட்டுமானத்துக்காக மட்டுமே ரூ.130 கோடி செலவிடப்பட்டது. 2 லட்சத்து 13 ஆயிரத்து 338 சதுர அடி பரப்பளவில் 6 தளங்களைக் கொண்டதாக கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டுள்ளது.

கலைக்கூடம், மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவு, மாநாட்டு கூடம், ஓய்வறை, சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு, பல்வகை பயன்பாட்டு அரங்கம், உறுப்பினர் சேர்க்கை பிரிவு, கலைஞர் பகுதி, குழந்தைகள் நூலகம், நாளிதழ்கள் – பருவ இதழ்கள் படிக்கும் பகுதி, அறிவியல் கருவிகள் பிரிவு, தமிழ் நூல்கள் பிரிவு, கலைஞரின் நூல்களைக் கொண்ட பிரிவு, ஆங்கில நூல்கள், ஆராய்ச்சி இதழ்கள், போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணாக்கர் பிரிவு போன்ற பல்வேறு பிரிவுகள் இந்த நூலகத்தில் உள்ளன.

நவீன கட்டுமான அம்சங்களுடன் குழந்தைகள், வாசகர்கள், பொதுமக்கள், எழுத்தாளர்கள் மற்றும் போட்டித் தேர்வாளர்கள் அனைவரையும் கவரக்கூடிய வகையில் நவீன அறிவியல் தொழில்நுட்ப அம்சங்களுடன் கலைஞர் நூற்றாண்டு நூலகம் உள்ளது.

உள்ளூர் மக்கள், வாசகர்களை தாண்டி தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து வரக்கூடிய சுற்றுலாப்பயணிகள், எழுத்தாளர்கள் அனைவரும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை வந்து பார்வையிட்டு செல்கிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த நூலகத்தில் மழைநீர் ஒழுகியதால் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்படும் ரேக்குகள் நனைந்து துருப்பிடித்தன. அண்டர் கிரவுண்ட் பார்க்கிங் பகுதியிலும் மழை தண்ணீர் புகுந்தது. அதன்பிறகு கட்டிடத்தை கட்டிய பொதுப்பணித்துறை அதிகாரிகள் பார்வையிட்டு, பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு மழைநீர் ஒழுகாமல் இருக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மதுரையில் பெய்து வரும் கோடை மழையில் மீண்டும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் தண்ணீர் புகுந்துள்ளது. கீழ் தளத்தில் உள்ள கலைக்கூடம், மாற்றுத்திறனாளிகள் பிரிவு (பார்வையற்றோர் பிரிவு) ஆகியவற்றில் மழைநீர் புகுந்தது. கட்டிடத்துக்கு வெளிப்புறமாக செல்லக்கூடிய மழைநீர் குழாய் உடைந்து அந்தத் தண்ணீர் இந்த அறைகளில் புகுந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், இந்த பிரிவுகளை தற்காலிகமாக பொதுமக்கள், வாசகர்கள் பார்வையிடவும் பயன்படுத்தாமலும் இருக்க மூடிவைக்கப் பட்டுள்ளது. மழையால் கம்யூட்டர் சர்வர் அறையும் பாதிப்புக்குள்ளானதாக கூறப்படுகிறது.

தற்காலிகமாக இரண்டு நாட்களுக்கு வாசகர்களுக்கு புத்தகம், இரவல் கொடுப்பது நிறுத்தப்பட்டுள்ளதாக கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் இருந்து வாசகர்களுக்கு வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே ஒவ்வொரு சிறு மற்றும் பெரு மழைக்கும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் தாக்குப்பிடிக்க முடியாமல் அதன் கட்டிட அமைப்பு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் இணைந்து முழுமையாக ஆய்வு செய்து மழைக்காலத்தில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வாசகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இது குறித்து மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலக பணியாளர் ஒருவரிடம் கேட்டபோது, “வெளிப்புறமாக செல்லக்கூடிய மழைநீர் குழாயில் தெர்மோகோல் சென்று அடைதுதுள்ளது. அந்த அடைப்பால், கீழ் தள அறைகளில் தண்ணீர் புகுந்தது. தற்போது தண்ணீர் வெளியேற்றப்பட்டு மீண்டும் அதுபோல், மழைநீர் புகாதவாறு பராமரிப்பு பணிகள் நடக்கிறது. பணிகள் முடிவுற்றதும் நாளை மூடப்பட்ட இரு பிரிவுகள் செயல்படத் தொடங்கும். கணிணி சர்வர் அறை பாதிக்கப்படவில்லை. சாப்ட்வேர் அப்டேட் செய்யப்படுவதாலே இரண்டு நாளைக்கு புத்தகம் இரவல் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது” என்றார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *