திருச்சி: கல்லூரிகளில் வணிகவியல், ஏஐ படிப்புகளில் சேர மாணவர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானவுடன், திருச்சியில் உள்ள அரசு மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியது.

இதில், மாணவர்கள் வணிகவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு (artificial intelligence-AI) பட்டப்படிப்பு படிப்புகளில் சேர அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதுகுறித்து திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி வணிகவியல் துறைத் தலைவர்(சுயநிதி பிரிவு) அலெக்ஸாண்டர் பிரவீன் துரை கூறியது: சர்வதேச கார்ப்பரேட் பெரு நிறுவனங்கள் ஒரு துறையில் சிறப்புத் திறன் கொண்ட பட்டதாரிகளை தேடுகின்றன. தற்போது உயர்கல்வி புதிய டிரெண்டை நோக்கி பயணிக்கத் தொடங்கிவிட்டது.

கர்நாடாக மாநிலத்தில் பல உயர்கல்வி நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்டத்துறையில் குறிப்பிட்ட பிரிவை மட்டும் தேர்வு செய்து அதில் சிறந்த மாணவர்களை உருவாக்கி வருகின்றன. அதையே சர்வதேச நிறுவனங்கள் விரும்புகின்றன. கல்வி நிறுவனங்களும், சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து பாடத்திட்டங்களை வழங்கி வருகின்றன.

பி.காம் என்றால் மேலோட்டமாக படித்து வந்த நிலை மாறி, பி.காம் ஹானர்ஸ், பிசினஸ் அனலிஸ்டிக்ஸ் என்ற பல்வேறு புதிய படிப்புகள் வந்துவிட்டன. பி.காம் ஹானர்ஸ் படிப்பை இங்கிலாந்தில் உள்ள ஏசிசிஏவுடன்(அசோசியேஷன் ஆஃப் சார்ட்ட் சர்ட்டிபைட் அக்கவுண்ட்ஸ்) இணைந்து சில கல்லூரிகள் வழங்கி வருகின்றன என்றார்.

அதேபோல திருச்சியில் உள்ள பெரும்பாலான தனியார் கல்லூரிகளில் வணிகவியலை தேர்வு செய்யும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகளவு உள்ளது. தவிர, அரசு கல்லூரிகளில் வணிகவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், பிசிஏ, பி.ஏ, தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடங்களை தேர்வு செய்வோரின் எண்ணிக்கையும் அதிகளவு உள்ளது.

இதுகுறித்து தந்தை பெரியார் அரசு கலை அறிவியல் கல்லூரி சேர்க்கை பிரிவு அலுவலர்கள் கூறியது: அரசு கல்லூரிகளில் மே 7-ம் தேதி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கியது. இதில், பி.காம், பிஏ தமிழ், ஆங்கிலம், பி.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், பிசிஏ ஆகிய படிப்புகளுக்கு அதிகம் பேர் விண்ணப்பிக்கின்றனர் என்றனர்.

இதேபோல, ‘செயற்கை நுண்ணறிவு-ஏஐ முக்கிய துறையாக உருவாகி வருவதால், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் தரவு அறிவியல் களத்தை ஆராய்வதற்காக ஏஐ நோக்கி அதிகளவில் ஈர்க்கப்படுகிறார்கள்’ என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

தனியார் கல்லூரிகளில் வணிகவியல், ஏஐ பாடங்களில் 80 சதவீதம் இடங்கள் நிரம்பிவிட்டதாக கல்லூரி நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன.

தவிர, கம்ப்யூட்டர் சயின்ஸ், சுற்றுச்சூழல் அறிவியல், மற்றும் நியூட்ரீஷியன் மற்றும் டயட்டீஷியன் பாடங்களில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *