தருமபுரி: ‘இந்தியாவைக் காக்க ஸ்டாலின் அழைக்கிறேன்’ என்ற திமுக விளம்பரம் கிராமத்து பழமொழி ஒன்றை நினைவுபடுத்துகிறது என தருமபுரியில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசினார்.

தருமபுரி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.அசோகனை ஆதரித்து வாக்கு சேகரிக்கும் வகையில் அக்கட்சி சார்பில் தருமபுரி வள்ளலார் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தில் பழனிசாமி பங்கேற்று அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு பேசியதாவது..

“சில கட்சியினர் நேரத்துக்கும், சூழலுக்கும் ஏற்ப அவ்வப்போது கூட்டணி மாறுவர். தருமபுரி தொகுதியை தங்கள் கோட்டையாக அந்தக் கட்சியினர் நினைத்துள்ளனர். ஆனால், தருமபுரி அதிமுக-வின் கோட்டை. அனைத்து சாதியினருக்கும் உரிய பலன் கிடைக்கும் வகையில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த அரசாணை பிறப்பித்த கட்சி அதிமுக.

ஒரு கட்சியினர் வைத்த கோரிக்கையை ஏற்று, பல்வேறு தரப்பினருடனும் ஆலோசித்து இட ஒதுக்கீட்டை அதிமுக அரசு வழங்கியது. ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மாட்டோம் என்று கூறும் கட்சியுடன் தற்போது கூட்டணி அமைத்துள்ளனர். இது சந்தர்ப்பவாத அரசியல்.

தருமபுரியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியபோது, முந்தைய அதிமுக ஆட்சி இருண்ட ஆட்சி என குற்றம் சுமத்தியுள்ளார். ஆனால், இதுவரை எந்த அரசாங்கமும் செயல்படுத்த முடியாத மக்கள் நல திட்டங்களை செயல்படுத்திய அரசு முந்தைய அதிமுக அரசு தான்.

முதல்வர் ஸ்டாலின் பொய்யைத் தவிர எதுவுமே பேசுவதில்லை. இவரது ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை, கஞ்சா விற்பனை அதிகளவில் நடக்கிறது. அதை தடுக்க திறமையில்லாத பொம்மை முதல்வராக ஆட்சி செய்து வருகிறார். முந்தைய அதிமுக ஆட்சியில் மாணவர்கள் கைகளில் மடிக்கணினி விளையாடியது. ஆனால் இன்றைய ஆட்சியில் போதைப்பொருட்கள் விளையாடுகிறது.

காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க காரணமாக இருந்தது அதிமுக அரசு. அவ்வாறு கிடைத்த தீர்ப்பின் அடிப்படையிலான தண்ணீரை கூட முறையாக பெற்றுத்தர முடியாத அரசு திமுக அரசு. கடந்த ஆண்டு முதல்வர் ஸ்டாலின் மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து விட்டதை நம்பி 5.5 லட்சம் ஏக்கரில் டெல்டா பகுதி விவசாயிகள் குறுவை சாகுபடி செய்தனர். ஆனால், அந்த பயிர் விளைச்சலை எட்ட முடியாத வகையில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. ஆனால், கர்நாடக அரசு நமக்கு வழங்க வேண்டிய தண்ணீரைக் கூட முதல்வர் ஸ்டாலின் கேட்டு பெற்றுத் தரவில்லை.

‘இந்தியாவைக் காக்க ஸ்டாலின் அழைக்கிறேன்’ என்ற திமுக-வின் தேர்தல் தொடர்பான விளம்பரத்தை பார்த்தால் ‘கூரை ஏறி கோழி பிடிக்காதவர், வானம் ஏறி வைகுண்டம் போவாராம்’ என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது. ஏழை, எளிய குடும்பப் பெண்கள் பயன்பெற்று வந்த தாலிக்கு தங்கம் திட்டத்தை இந்த திமுக அரசு நிறுத்திவிட்டது. மாதம் ஒருமுறை மின் கட்டணம் கணக்கீடு, கல்விக் கடன் ரத்து போன்ற அறிவிப்புகள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை.

கட்டுமான பொருட்களான சிமெண்ட், கம்பி, செங்கல் உள்ளிட்ட அனைத்து விலையும் பலமடங்கு உயர்ந்துள்ளது. மழை நீர் வீணாகாமல் நீர்நிலைகளில் சேரும் வகையில் குடிமராமத்து திட்டத்தை அதிமுக அரசு செயல்படுத்தி நிலத்தடி நீரை பாதுகாத்தது. ஆனால், திமுக அரசு அந்த திட்டத்தையே கிடப்பில் போட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் பல நீர்ப்பாசன திட்டங்களை செயல்படுத்தாமல் திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது. இதெல்லாம் மாற அதிமுக வேட்பாளருக்கு வாக்களியுங்கள்” என தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான கே.பி.அன்பழகன், முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன், எம்எல்ஏ-க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், நிர்வாகிகள் டி.ஆர்.அன்பழகன், எஸ்.ஆர்.வெற்றிவேல், தருமபுரி நகரச் செயலாளர் பூக்கடை ரவி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *