ஹைதராபாத்: ஹைதராபாத் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 190 ரன்கள் பின்தங்கியிருந்த இங்கிலாந்து, ஆலி போப்பின் ஆல் டைம் கிரேட் இன்னிங்ஸான 196 ரன்கள் மூலம் மீண்டெழுந்த பிறகு, அறிமுக இடது கை ஸ்பின்னர் ஹார்ட்லியின் 7 விக்கெட்டுகள் மூலம் இந்திய அணியை வீழ்த்தியது. 100 ரன்களுக்கும் அதிகமாக முன்னிலை பெற்றிருந்த நிலையில் இந்திய அணி இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டிகளை இழந்ததில்லை என்ற தன்னிரகற்ற சாதனையை இங்கிலாந்து உடைத்து வரலாறு படைத்தது. மேலும் இந்திய மண்ணில் 15வது டெஸ்ட் வெற்றியைப் பெற்று இந்திய மண்ணில் அதிக வெற்றி பெற்ற அணியாக இங்கிலாந்து திகழ்கிறது.

மே.இ.தீவுகளும், ஆஸ்திரேலியாவும் 14 டெஸ்ட் போட்டிகளை இந்திய மண்ணில் வென்றுள்ளன. அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் கூட்டணி இருந்திருந்தால் நிச்சயமாக 190 ரன்கள் முன்னிலையில் இன்னிங்ஸ் தோல்வியை இங்கிலாந்துக்கு பரிசாக அளித்திருக்கும். இதிலிருந்து தெரியவில்லையா, அஸ்வின், ஜடேஜா கூட்டணி குழிப்பிட்ச் கூட்டணி என்று. கும்ப்ளே, ஹர்பஜன் கூட்டணிதான் 3வது, 4வது இன்னிங்ஸின் டெட்லி பவுலலர்கள்.

வெளிநாட்டில் இலங்கையில் 2015-ல் 192 ரன்கள் முன்னிலைப் பெற்று தோற்றுள்ளது இந்திய அணி. ஆகவே இந்த முன்னிலையில் தோற்பது ஒன்றும் இந்திய அணிக்கு புதிதல்ல. ஆனால் இந்திய மண்ணில் இது போன்று வரலாற்றுத் தோல்வி கண்டதில்லை. 2015- கால்லே டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் தினேஷ் சந்திமால் 162 ரன்களை விளாசி இந்திய அணியைப் பாடாய்ப்படுத்தி எடுத்து இலங்கை அணி இந்திய அணிக்கு 176 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தார். ஆனால் 2வது இன்னிங்ஸில் ரங்கனா ஹெராத் 48 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்திய அணியை 112 ரன்களுக்குச் சுருட்டினார்.

நேற்று இங்கிலாந்தின் ஆலி போப் வாழ்நாளின் ஆகச்சிறந்த இன்னிங்ஸை ஆடி இங்கிலாந்துக்கு 231 ரன்கள் முன்னிலையைக் கொடுக்க இந்திய அணியை இடது கை ஸ்பின்னர் ஹார்ட்லி 7 விக்கெட்டுகளை கைப்பற்ற இந்திய அணி வரலாற்றுத் தோல்வி கண்டது. காலே டெஸ்ட்டிற்கும் நேற்றைய ஹைதராபாத் டெஸ்டிற்கும் நிறைய ஒற்றுமைகள் இருந்தலும் ஒரு முக்கியமான வேற்றுமை அன்று கோலி கேப்டனாக இருந்தார். முதல் இன்னிங்ஸில் கோலியும், ஷிகர் தவானும் சதம் கண்டனர். இந்தப் போட்டியில் இந்திய அணியில் ஜெய்ஸ்வால், ராகுல், ஜடேஜா 80 ரன்களுக்கும் மேல் எடுத்து சதம் காணாமால் ஆட்டமிழந்தனர். மிக முக்கியமாக விராட் கோலி இல்லாதது பெரிய இழப்பு என்பதை அவர் உணர வைத்து விட்டார்.

போட்டியில் தோற்றதற்குக் காரணம் இந்தியாவின் அனுபவ ஸ்பின்னர்களான அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல் ஆகிய இந்திய ஸ்பின்னர்கள் ஒரே லைன் மற்றும் லெந்த்தில் பந்து வீசியது தான் இங்கிலாந்து வீரர்கள் ஸ்வீப் ஆட காரணம் என ஆட்டம் முடிந்ததும் கும்ப்ளே சொல்லி இருந்தார். இந்தியாவின் பேட்டிங் நேற்று சொதப்பியது. இந்திய பேட்டர்கள் அனுபவசாலிகளாகவும் ஐபிஎல் சூரப்புலிகளாகவும் இருந்தனரே தவிர, இங்கிலாந்தின் அறிமுக பவுலர் ஹார்ட்லியை இவர்கள் எந்த வித மிரட்டலும் செய்யவில்லை. மொத்தமாக அவரது பவுலிங்கிற்கு அடிபணிந்து போயினர். ஜடேஜா ரன் அவுட் ஆனது தான் ஆட்டத்தை மாற்றிய தருணம்.

இந்தத் தொடருக்கு முன்பாக ஆலி போப், பென் டெக்கெட், ஜாக் கிரவ்லி ஆகியோர் துபாயில் பயிற்சி மேற்கொண்டு சகலவிதமான ஸ்வீப் ஷாட்களையும் ஆடிப்பார்த்து பழகினர். அதுவும் ஆலி போப், இலங்கையின் வலது கை பேட்டர் தில்ஷான் ஆடும் விக்கெட் கீப்பர் தலைக்கும் மேலான ஸ்கூப் ஷாட்டை, ரிவர்ஸ் தில்ஸ்கூப் முறையில் ஆடியது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. முதல் இன்னிங்ஸில் தற்காப்பாக ஆடி சொதப்பியது போதும் என்று இங்கிலாந்து அனைத்து ஷாட்களையும், முடியும் தறுவாயில் இருக்கும் அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல் பவுலிங்கை புரட்டி எடுத்தனர். தடுத்தாடி ஆட்டமிழப்பதை விட அடித்து ஆடி ஆட்டமிழப்போம் இதுதான் ‘பாஸ்பால்’ கொள்கை. அதற்கேற்ப ஆலி போப் ஆடினார்.

மாறாக இப்போதிருக்கும் இந்திய அணியில் ஸ்வீப் ஷாட்களை இயல்பாகவே ஆடும் பழக்கம் உள்ள வீரர்கள் இல்லை. வலிந்து ஸ்வீப் ஆடும் வீரர்களாகவே உள்ளனர். ஆக்ரோஷமாக ஆட வேண்டும் என்று அதற்கான உத்திகள், தந்திரோபாயங்கள் எதுவும் இன்றி இந்திய அணியினர் இந்திய மண்ணில் இதுவரை காணாத தோல்வி அடைந்துள்ளனர்.

இங்கிலாந்தின் ஆதிக்கத்துக்கு ஓர் உதாரணம் அஸ்வின், ஜடேஜா இருவரும் சேர்ந்து 413 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளனர். இதற்கு முன் இவர்கள் இந்த சாத்து வாங்கியது இலங்கையில் 437 ரன்கள் கொடுத்து 14 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய போதுதான். இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 72 ரன்களை ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டில் மட்டுமே குவித்ததாகவும் 50 ரிவர்ஸ் ஸ்வீப்களை இங்கிலாந்து ஆடியதாகவும் இதில் அதிகபட்சமாக 14 பவுண்டரிகளை விளாசியதாகவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

ரிவர்ஸ் ஸ்வீப்களில் இந்தியாவைக் காலி செய்தது இங்கிலாந்து. ஆனால் இங்கிலாந்து அணி இனி வரும் டெஸ்ட்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் குழிப்பிட்ச் இப்போதே தயாராகிக் கொண்டிருக்கும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் எச்சரித்துள்ளனர். ஆனால் எந்தப் பிட்ச் என்றால் என்ன?. இங்கிலாந்தின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கப்போகிறது. இந்திய அணிதான், இந்திய அணியின் கேப்டன் தான் தன் அணித்தேர்வு, களவியூகத்தில் மரபான முறைகளைக் கைவிட்டு புதிதான களவியூகம் அமைத்தல் என்று கற்பனை சக்தியுடன் செயல்பட வேண்டும்.

அணியில் இளம் ஸ்பின்னர்களை சேர்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஜடேஜாவையும் அக்சர் படேலையும் பேட்டிங்கிற்காக வைத்திருப்பது முட்டாள்தனமான முடிவு. குல்தீப் யாதவ்வைக் கொண்டு வர வேண்டும். ஷாபாஸ் நதீம் போன்ற இடது கை ஸ்பின்னர்களையும் சாய் கிஷோர் போன்றோர்களையும் முயற்சி செய்ய வேண்டும். முதலில் ஷுப்மன் கில்லை ரஞ்சி டிராபிக்கு அனுப்ப வேண்டும். அவருக்கு பதிலாக ரஜத் படிதாரை எடுக்க வேண்டும். சுருக்காமாக இந்திய அணி பழைய பல்லவியைக் கைவிட்டு புதிதாகச் சிந்திக்க வேண்டும்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *