சென்னை: சென்னையில் ரூ.23.25 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டு 2 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக கூடுதல் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்தார்.

சென்னை டிஜிபி அலுவலகத்தில் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு கூடுதல் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: சென்னையில் சிலர் சைக்கோட்ரோபிக் போதைப் பொருட்களை கள்ளச் சந்தையில் விற்பனை செய்ய முயற்சி செய்வதாக போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு சிஐடியின் சென்னை பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

4 மாதங்களாக கண்காணிப்பு: இதையடுத்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் லட்சுமணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, கடந்த 4 மாதங்களாக தனிப்படை போலீஸார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். ஜன.26-ம் தேதி திருவொற்றியூரை சேர்ந்த நீலமேகன் ( 50 ) என்பவரை போலீஸார் கைது செய்து, அவரிடம் இருந்து 25 கிலோ மெத்தகுலோன் என்ற போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, வில்லிவாக்கத்தை சேர்ந்த சம்சுதீன் ( 33 ) என்பவரிடம் இருந்து 68 கிலோ மெத்தகுலோனை பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப் பட்ட 93 கிலோ மெத்தகுலோன் போதைப் பொருளின் மதிப்பு ரூ.23.25 கோடி ஆகும். சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும். இதில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். முதற்கட்ட விசாரணையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சென்னையில் ஒரு கண்டெய்னரில் இருந்து, போதைப் பொருட்களை திருடி, அதனை 4 மாதங்களாக விற்பனை செய்ய இவர்கள் முயற்சி செய்துவந்தது தெரியவந்தது.

மேலும், இந்த தனிப்படை 97 கிலோ ஆம்ரோஸ் என்ற வேதிப் பொருளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறது. போதைப் பொருட்கள் தொடர்பாக 10581 என்ற இலவச தொலைபேசி எண்ணுக்கும், 9498410581 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கும் பொது மக்கள் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் லட்சுமணன் தலைமையிலான தனிப் படை போலீஸாரை பாராட்டி பரிசு வழங்கினார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *