சென்னை: சென்னை, எண்ணூர் சுனாமிகுடியிருப்பைச் சேர்ந்த மீனவர்களான பாலமுருகன், அருள்தாஸ், கருணாகரன், ராஜன், முருகன், அசோக் ஆகிய 6 மீனவர்கள் குஜராத் மாநிலம், போர்பந்தர் என்ற இடத்தில் உள்ள தனியார் மீன்பிடிநிறுவனத்தில் வேலை செய்வதற்காக கடந்த மாதம் குஜராத் சென்றனர்.

பின்னர், அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு, குஜராத் கடல் பகுதியில் விசைப் படகு மூலம் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த பாகிஸ்தான் கடலோர காவல்படையினர், எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மீனவர்கள் 6 பேரையும் கைதுசெய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளது.

அத்துடன், அவர்களுடைய படகுகள் மற்றும் வலைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்த தகவல் சம்பந்தப்பட்ட நிறுவனம், மீனவர்களின் குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தவில்லை. இதனால், மீனவர்களின் குடும்பத்தினர் பரிதவித்து வருகின்றனர்.

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் கூறும்போது, “குஜராத்தில் வேலைக்குச் சென்ற மீனவர்கள் 6 பேரை பாகிஸ்தான் கடலோர காவல்படை சிறை பிடித்து வைத்துள்ள விஷயத்தை தனியார் நிறுவனம் எங்களிடம் தெரிவிக்கவில்லை.

அருள்தாஸ் என்ற மீனவர் தனதுமகனின் செல்போனுக்கு அனுப்பியவாய்ஸ் மெசேஜ் மூலமே எங்களுக்கு இத்தகவல் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்கக் கோரி சென்னை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளாம். மேலும், மத்திய, மாநில அரசுகள் இவ்விஷயத்தில் தலையிட்டு உடனடியாக கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

இதுகுறித்து, மீன்வளத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “பாகிஸ்தான் கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள சென்னை மீனவர்களை விடுவிப்பது குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *