கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில்,  கோவை தனியார் கல்லூரி வளாகத்தில் கூடைப்பந்து போட்டிகள் நடந்தன. மகளிர் மற்றும் ஆடவர் இரண்டு பிரிவுகளிலும் தமிழ்நாடு அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது. தமிழ்நாடு மகளிர் அணி, பஞ்சாப் மகளிர் அணியுடன் இறுதிப்போட்டியில் மோதியது.

கூடைப்பந்து போட்டி

தமிழ்நாடு மகளிரணி ஒரு தோல்வியை கூட சந்திக்காமல், இந்தத் தொடர் முழுவதும் லீக் மற்றும் அரையிறுதி உள்ளிட்ட அனைத்துப் போட்டிகளிலும் வெற்றியை பெற்றிருந்தது. அதேபோல பஞ்சாப் மகளிர் அணியும் அனைத்துப் போட்டிகளிலும் பிரமாண்ட வெற்றியை பெற்றிருந்தது.

சமபலம் வாய்ந்த அணிகள் என்பதால் இந்த இறுதிப் போட்டிக்கு எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. ஆனால் முதல் பாதியில் பஞ்சாப் அணி ஆதிக்கம் செலுத்தியது. அந்த அணியின் ஆக்ரோஷமான ஆட்டம், தமிழ்நாடு அணி திட்டங்களை சரியாக நிறைவேற்றாதது உள்ளிட்டவை காரணமாக பஞ்சாப் அணி தொடர்ந்து முன்னிலையில் இருந்தது.

தமிழ்நாடு அணி

முதல் பாதி முடிவில் 40-22 புள்ளிகள் அடிப்படையில் பஞ்சாப் அணி முன்னிலை வகித்தது. தமிழ்நாடு அணி 18 புள்ளிகள் பின்தங்கியிருந்தது. அந்த இடத்தில் இருந்து கம்பேக் கொடுப்பது மிகவும் கடினமானது.

அந்த அசாத்தியத்தை செய்து காட்டியது தமிழ்நாடு. கேப்டன் ஹரிமா சுந்தரி, அந்தேயா டெய்சி, தீப்தி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி போட்டியை தமிழ்நாடு பக்கம் திரும்பிக் கொண்டு வந்தனர். தமிழ்நாடு அணி ஒவ்வொரு புள்ளி எடுக்கும்போதும் பார்வையாளர்கள் ஆரவாரம் செய்ய, வீராங்கனைகள் உற்சாகத்துடன் விளையாடினர்.

கூடைப்பந்து போட்டி

ஒருபக்கம் புள்ளி எடுப்பதிலும், மறுபக்கம் பஞ்சாப் அணியை புள்ளி எடுக்க முடியாமல் தடுப்பாட்டத்திலும் சிறப்பாக ஆடினர். இதனால் 70-66 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி பஞ்சாப்பை வீழ்த்தியது. இதன்மூலம் தமிழ்நாடு மகளிர் அணி தங்கப்பதக்கம் வென்றது.

இந்த வெற்றி குறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு மகளிரணி கேப்டன் ஹரிமா சுந்தரி, “எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு அதிகமாக இருந்தது. தொடக்கத்தில் நாங்கள் வகுத்த சில திட்டங்கள் கைக்கொடுக்கவில்லை. நாங்கள் எங்கள் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவுடன் பஞ்சாப் அணி தடுமாறிவிட்டது.

தமிழ்நாடு மகளிரணி

ஜெயிக்கிறோமோ… தோற்கிறோமா… கடைசிவரை சண்டை செய்ய வேண்டும். அதைத்தான் செய்தோம். எங்களுக்குத் துணை நின்ற பயிற்சியாளர்கள், கூடைப்பந்து கூட்டமைப்பு, கேலோ இந்தியா ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி!” என்றார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *